சினிமா

கமல் அரசியலுக்கு வருவாரா – அனுஹாசன்

‘அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை, நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சம் இல்லையே’ என, ‘இந்திரா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, ‘டிவி’ ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், குணசித்திர நடிகை என தன் திறமையால் திரை உலகில் வெற்றிகரமாக வலம் வரும் அனுஹாசன் மனம் திறக்கிறார்…
* தற்போதைய படம்?

வல்லதேசம் படத்தில் நடித்து வருகிறேன். பெண்ணை மையப்படுத்திய கதை இது. இந்திரா படத்திற்கு பிறகு இதில் நாசருடன் நடிக்கிறேன். இப்படம் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் தான். சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கேன்.

* படத்தின் இயக்குனர்?

நந்தா தான் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவும் அவர் தான். படத்தை 70 சதவீதம் லண்டனிலும், மீதியை இந்தியாவிலும் எடுத்துள்ளார். ஒவ்வொரு இடங்களின் அழகையும் கேமராவில் கொண்டு வந்திருக்கிறார். திரில்லிங் கார் சேசிங் என படம் விறுவிறுப்பாக செல்லும். நடிகர்கள் ரோலுக்கு பொருத்தமாக அமைந்துள்ளனர்.

* படத்தின் கதை என்ன?

படத்தில் என் கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. என் குழந்தையை சிலர் கடத்தி விடுவர். ஒரு தாயின் குழந்தை காணாமல் போனால் மனநிலை எப்படி இருக்கும்? அவளின் உணர்ச்சிகள் என்ன? அந்த குழந்தையை மீட்க தாய் என்ன செய்கிறார் என்பதை தெளிவாக இந்த படத்தில் கூறியிருக்கிறார் இயக்குனர். உணர்ச்சி, அதிர்ச்சி, காதல், எதிர்பாராத திருப்பம், தேசப்பற்று எல்லாமே இருக்கும் இந்த படத்தில்.

 

* சண்டைக்காட்சிகளில் நடித்தது?

நிறையக் காட்சிகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கிறேன். பயன்படுத்தியது எல்லாமும் உண்மையான துப்பாக்கிகள். கதாநாயகியாக மட்டுமின்றி இப்படம் எனக்கு சில அனுபவங்களை கற்று தந்தது.

* தமிழ் படங்களில் காண முடியலையே?

லண்டனில் பிபிசி ‘டிவி’யிலும் மற்றும் தனியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தேன். ஆங்கில படம் ஒன்றிலும் நடித்தேன்.

* வெளியாகவுள்ள படங்கள்?

தமிழ், மலையாளத்தில் நான் நடித்த மூன்று படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. கேணி என்ற தமிழ் படம் ஊரில் நிலவும் தண்ணீர் பிரச்னையை விளக்கும். தண்ணீர் பிரச்னையை அரசியல் ஆக்காதீர்கள் என கூறும் படம். வாக்கு என்ற மலையாள படத்தில் இருபது வயது துவங்கி 55 வயது வரையிலான பெண்ணின் வாழ்க்கை பயணம் தொடர்பானது. ஹாக்கி என்ற படத்தில் பயிற்சியாளராக நடித்துள்ளேன்.

* எந்த ஊரில் வசிக்கிறீங்க?

சமீபத்தில்தான் அப்பா, அம்மா இறந்தனர். இதனால் நான் இந்தியா வந்து விட்டேன். இங்கு எனக்கு நிறைய கடமைகள் உள்ளன. அதை நான் ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும். இனி இங்கு தான் இருக்கப் போகிறேன்.

* பட தயாரிப்பில் ஆர்வம் உண்டா?

படம் தயாரித்திருக்கிறேன். என்னுடைய மன நிலைக்கு அது சரியாகவில்லை. திடீர் என கோபம் வரும். அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். படம் இயக்க வேண்டும் என பலரும் கேட்டு வருகிறேன். ஒரு இயக்குனர் ஒரு கதையை கூறினால் அது மக்களை போய் சேருவதாக இருக்க வேண்டும். மக்களுடன் இருந்து மக்கள் பிரச்னைகளை அதிகம் தெரிந்து இருக்க வேண்டும்.

*ஆசை, லட்சியம்?

சிறிய வயதில் என்னிடம் கேட்டால் ‘பி ஹாப்பி’ என்று தான் கூறுவேன். இந்த நிமிடத்தில் என்ன முக்கியமோ, எது சந்தோஷம் எனக்கு கொடுக்குமோ அதை தேடி தான் நான் செல்வேன். இதுதவிர பத்தாண்டுகளில் இப்படி இருக்க வேண்டும்; பெரிய ஆளாக வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

* உங்கள் சித்தப்பா கமல் அரசியலுக்கு வருவாரா?

எட்டு ஆண்டுகளாக லண்டனில் இருந்தேன். பதினைந்து நாட்களாக தான் சென்னையில் இருக்கிறேன். இங்குள்ள அரசியல் நிலவரம் அவ்வளவாக எனக்கு தெரியாது. அரசியலுக்கு வருவது கமல் சார் முடிவு. மக்கள் ஆசை அது என்றால் அதை கமலிடம் தெரிவிக்கலாமே தவிர, அவர் என்ன செய்ய வேண்டும் என கூற முடியாது. அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button