கமல் – ரஜினி கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா?:
நாத்திகரான கமல்ஹாசனும் ஆன்மிகவாதியான ரஜினிகாந்தும் ஒன்றுசேர்ந்தால் தமிழகத்தில் புதியதோர் நல்லாட்சி ஏற்படலாம் என்ற பரவலான கருத்து உருவாக்கம் பெற்றுள்ளது.
‘நான் எப்போ வருவேன் – எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா.., வர வேண்டிய நேரத்திலே கரெக்ட்டா வருவேன்’ என்ற ரஜினிகாந்தின் சினிமா வசனம் விரைவில் மெய்ப்படும் நேரம் நெருங்கிவிட்டதாக தமிழக மக்களில் ஒருதரப்பினர் கருதத் தொடங்கியுள்ளனர்.
‘அரசியல் என்னும் புதைக்குழிக்குள் கால்வைத்து சிக்கிக் கொள்ள மாட்டேன்’ என்று ஒதுங்கிப்போய் கலைத்துறையில் தனது வல்லமையை பதிவு செய்வதில் மட்டும் அக்கறைகாட்டி வந்த கமல்ஹாசன், வர்தா புயல் பாதிப்பின்போது தமிழக அரசுக்கு எதிராக முதன்முறையாக குரல் எழுப்பினார்.
அந்நாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் மனம் கமலின் விமர்சனத்தால் எந்த அளவுக்கு புண்பட்டிருக்கும்? என்பது கமலின்மீது அப்போது அறிக்கைப் போர் தொடுத்த இந்நாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சுடுமொழிகள் இன்றளவும் கமல் ரசிகர்களின் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக – மவுனமான எரிமலையாக புகைந்து கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் உரிமைக்காக கமல் எழுப்பிய போர்க்குரல், நீட் தேர்வை எதிர்த்துப் போராடி, அகால மரணம் அடைந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணம், அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். – தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டதாக வந்த தகவல்கள் போன்றவை கமல்ஹாசனை முழுநேர அரசியல் நோக்கர்களில் ஒருவராக மாற்றிவிட்டது, காலத்தின் கட்டாயம் என்றே கருத வேண்டியுள்ளது.
குறிப்பாக, கமல்ஹாசன் அரசியல் என்னும் ஆழ்கடலுக்குள் குதிக்க துணிந்து விட்டார் என்பது ஓரளவுக்கு உறுதியானவுடன் ஆளும்கட்சி தரப்பினர் ‘கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தால் கமலுக்கு தக்கபடி பதில் அளிப்போம்’ என்று தற்காப்புக்காக கூறிய பதில்மொழியும், ‘முதல்-அமைச்சர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் விற்கும் பொம்மை அல்ல’ என்று அமைச்சர் ஒருவர் கூறிய கருத்தும், கரையோர அலையாக அரசியல் என்னும் ஆழ்கடலின் பக்கம் கமலை இழுத்துச் சென்றது என கருதலாம்.
தொடர்ந்து, ஆட்சியில் ஊழல் வியாபித்துள்ளதாக அவ்வப்போது சுட்டிக்காட்டி வருவதையும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கமலின் டுவிட்டர் பதிவுகளும், ஒருசில நிகழ்ச்சிகளில் அவர் பேசிய பாங்கும், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும், நான் அரசியலில்தான் இருக்கிறேன் என கமல் வெளிப்படையாக தெரிவித்த கருத்தும் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், சரத்குமார் வரிசையில் மற்றொரு ‘அரசியல் ஹீரோ’ உருவாகி விட்டார் என்பதை உறுதிப்படுத்தியது.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற முரசொலி பவளவிழா நிகழ்ச்சியில் தமிழகத்தின் பத்திரிகையாளர்களுடன் மேடையை பகிர்ந்துகொண்ட கமல் ஒரு நடிகராகவோ, பத்திரிகையாளராகவோ பார்வையாளர்களின் கண்களுக்கு தெரியவில்லை. மாறாக, தேர்ச்சிபெற்ற ஒரு அரசியல் கட்சி தலைவராகவே அவர் தோன்றினார்.
ஓணம் பண்டிகையையொட்டி கேரள முதல் மந்திரியுடன் சந்திப்பு, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு என தனது அரசியல் பயணத்தின் துவக்கத்துக்கான சிலவற்றை பகிரங்கமாகவே செய்து வந்தாலும், தனது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்துடன் சில ரகசிய சந்திப்புகளை நடத்திய கமல், ஊழலை எதிர்ப்பதில் எனக்கும் ரஜினிகாந்துக்கும் ஒரே நிலைப்பாடுதான் என்பதை தெள்ளத்தெளிவாக போட்டுடைத்தார்.
‘எனது நிறம் காவியல்ல’ – என்ற கமலின் கருத்துக்கு பதிலடியாக பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘பச்சோந்திகளுக்கு நிறமில்லை’ என்று கூறியதும் ‘சபாஷ்.. சரியான போட்டி’ ஆக அமைந்திருந்தது. தமிழக அரசியலில் இதைப்போன்ற சரவெடிகள் தொடர்ந்தால் இந்த தீபாவளி அமர்க்களமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே மேலோங்கியது.
மக்கள் விரும்பினால் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு விருப்பம் உண்டு என்று சுற்றிவளைக்காமல் நெற்றியடியாக கமல் வெளியிட்ட கருத்தும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை உருவாக்கும் பணிகளில் அவர் காட்டிவரும் மும்முரமும் வரும் தைத்திங்களுக்குள் தமிழக அரசியலில் ஒரு சர்க்கரைப் பொங்கல் படையல் காத்திருக்கிறது என்பதற்கான அச்சாரமாக தெரிகிறது.
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒரு கட்சியின் கொள்கை – கோட்பாடுகளை விளக்க நான்கு தத்துவப் பாடல்களுடன் சினிமா எடுத்து மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதில்லை. கமல்ஹாசனே ஒப்புக்கொண்டதுபோல் அரைகுறையாக புரியும் அளவுக்கு திருக்குறளின் சைசில் தீப்பொறியாக ஒரு சிறு டுவீட் போதும். நெருப்பை பற்றவைக்கவும், அணைப்பதற்கும் அதுவே போதுமானது.
வரவே மாட்டேன் என்ற கமல்ஹாசன் அரசியலின் பக்கம் பார்வையை பதியவைத்து விட்டார். வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன் என்ற ரஜினிகாந்தின் வசனத்தை பொய்யாக்க விரும்பாமல் எனது அரசியல் பயணத்தில் ரஜினியும் வந்தால் இணைத்துக் கொள்வேன் என ஆன்மிகவாதியான தனது நண்பரின் அரசியல் பிரவேசத்துக்கும் நாத்திகரான கமல் பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.அதற்கேற்ப, பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தை ஆதரிப்பதாகவும் தனது ரசிகர்கள் இதில் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்து ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு’ என்பதை இலைமறைவற்ற காயாக வெளிகாட்டியது. அடுத்தகட்டமாக, நான் ஒரு நாத்திகவாதி. எனது கொள்கைகளும், ரஜினிகாந்தின் கொள்கைகளும் வெவ்வேறானவை. பா.ஜ.க.வில் இருக்க தகுதியானவர் என்று ரஜினிக்கு கமல் அளித்த சான்றிதழ் அவரது தேசியத்தையும், ஆன்மிகத்தையும் சுட்டிக்காட்டியதாகவே நேற்றுவரை தமிழக மக்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், மக்களுக்கு நன்மை ஏற்படுமானால், என்னுடைய சித்தாந்தத்தில் குறுக்கீடு இல்லாமல் இருக்குமானால்.., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தயார் என பிரபல ஆங்கில ஊடகத்துக்கு சமீபத்தில் கமல் அளித்துள்ள பேட்டி, துறுதுறுவென பலரது மூளை செல்களை பரபரக்க வைத்துள்ளது.
ரஜினிகாந்தின் இத்தனைக்கால காத்திருப்புக்கும் – கமலின் திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் தமிழக சட்டசபை தேர்தல் என்ற முகூர்த்தநாளில் கல்யாணம் நடத்த ரகசிய காய்நகர்த்தல் தற்போது தொடங்கிவிட்டதாக விபரமறிந்த வட்டாரங்களால் யூகிக்க முடிகிறது.
அதாவது, கமலின் தனிக்கட்சி வரும் ஜனவரி மாத துவக்கத்தில் செயல்பட தொடங்கிவிடும். அதற்குள் பா.ஜ.க.வுக்குள் ரஜினிகாந்த் எப்படியும் சங்கமம் ஆகிவிடுவார். அப்படி, பா.ஜ.க. என்னும் மிகப்பெரிய கட்சிக்கு செல்லும் ரஜினிகாந்துக்கு தமிழ்நாட்டில் கூட்டணி உள்பட அக்கட்சியின் செயல்பாடுகளில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பெரிய பதவி உடனடியாக கிடைக்கலாம்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா அழைப்பிதழை பெற்ற ரஜினிகாந்த் தனது சார்பில் மகளை அனுப்பி வைத்திருந்ததும், சென்னை வந்திருந்த பிரதமர் மோடி ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்ததும் இதற்கு கண்கண்ட சாட்சியாக கூறலாம்.
தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி கவிழ்ந்தாலோ, வேறு காரணங்களுக்காக கலைக்கப்பட்டாலோ, அல்லது, நித்தியகண்டம் – பூரணஆயுசு என்ற முதுமொழிக்கு ஏற்ப தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தாலோ.., தமிழக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் திரையுலகின் நெருங்கிய நண்பர்களான கமலும், ரஜினியும் நிச்சயமாக ஒன்றிணைவார்கள் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏற்கனவே ஒருமுறை ‘ஆண்டவனாலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது’ என்று ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட ரஜினிகாந்தின் வாய்சும், கமலின் புதுக்கட்சி மவுசும் தமிழகத்தில் நிச்சயமாக ஒரு புதிய அரசை உருவாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
கமல்ஹாசன் தலைமையில் அப்படி அமையும் புத்தாட்சி, ஊழல் என்ற பேயாட்சிக்கு எதிரான அத்தாட்சியாகவும், அடித்தட்டு மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் கொண்டு செல்லும் நல்லாட்சியாகவும் அமைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.