செய்திகள்

கம்பளை வைத்தியசாலையில் காணாமல் போன கொத்மலை பொலிஸ் சார்ஜனை தேடும் பணிகள் தொடர்கின்றது.

கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜனை தேடும் பணிகள் தொடர்ந்தும் ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பொலிஸ் சார்ஜன் சுப்பையா இளங்கோவன் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

கொத்மலையிலுள்ள தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில், திடீர் சுகயீனமுற்ற சுப்பையா இளங்கோவன், கம்பளை வைத்தியசாலையில் கடந்த 7ம் திகதி காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன், வைத்தியசாலையிலிருந்த நிலையில் அன்றைய தினமே, காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே, கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

56 வயதான சுப்பையா இளங்கோவன், மூன்று பிள்ளைகளின் தந்தை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 30 வருட காலமாக பொலிஸ் சேவையில் பணியாற்றிவரும் சுப்பையா இளங்கோவன், அரசியல்வாதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தராகவே அதிக காலம் கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொத்மலை, கம்பளை மற்றும் புண்டுலோயா பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். 

Related Articles

Back to top button