செய்திகள்

கம்பஹா மாவட்டம்- வத்தளை ஹேகித்த அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்..

 
அன்புருவே, அருளுருவே ஆறுமுகப் பரம்பொருளே
எங்கள் நலங் காக்கும் உற்றதுணை நீயல்லவோ
தங்குதடையின்றி நன்மைகள் நிலைத்துவிட
அருளிடய்யா எங்கள் சுப்ரமணியப் பெருமானே
சேவற் கொடியுடைய சிவனாரின் திருமகனே
மேற்கிலங்கை தனிலிருந்து அருளுபவன் நீயல்லவோ
ஏற்றமுடன் நாம் வாழ்ந்து உயர்வு நிலை பெற்றுவிட
வந்தருள்வாய் எங்கள் சுப்ரமணியப் பெருமானே
கம்பஹா பெருநிலத்தில் வீற்றிருக்கும் பேரருளே
நம்பியடி பணிவோர் துயர் களைவோன் நீயல்லவோ
எங்கள் குறைகளைந்து வல்லமையை நாம் பெற்றுவிட
ஏற்றவழி காட்டிடுவாய்  எங்கள் சுப்ரமணியப் பெருமானே
ஹேகித்த நல்லிடத்தில் இருந்தருளும் வேலவனே
அச்சம் அகற்றியெமை ஆட்சிகொள்வோன் நீயல்லவோ
உன்னருளால் நாமெல்லாம் மேன்மையடைந்துவிட
ஏற்றவழி காட்டி அருளிடுவாய் எங்கள் சுப்ரமணியப் பெருமானே
தேரேறிப் பவனிவரும் உமையவளின் இளமகனே
தோல்வியில்லா உயர் நிலையைத் தருவோன் நீயல்லவோ
தமிழ் மொழியும் நம்மவரும் தலைநிமிர்ந்து வாழ்ந்துவிட
நம்மோடு உடனிருப்பாய் எங்கள் சுப்ரமணியப் பெருமானே
வள்ளி, தெய்வானை அன்னையருடன் எழுந்தருளும் கந்தவேளே
வளங்கள் பொங்க நீதி நிலைக்க வழிசெய்வோன் நீயல்லவோ
உன் நாமம் ஒலிக்குமிடம் அருள் மழையே பொழிந்துவிட
அத்தனையும் அருளிடுவாய் எங்கள் சுப்ரமணியப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
image download