ஆன்மீகம்

கல்முனை மாநகர்- அருள்மிகு தரவை சித்திவிநாயகர் திருக்கோயில்..

கல்முனை மாநகரின் எல்லையிலே
கோயில் கொண்ட உமையவள் திருமகனே
சித்திகள் பெற்று நாம் தலைநிமிர வேண்டுமய்யா
நம்பினோம் உன்னையே நலம் காத்து அருளிடய்யா.

தரவைக் குளத்தருகில் வயல் சூழ்ந்த நன்னிலத்தில்
குடியமர்ந்து ஆசிதரும் எங்கள் குல நாயகனே
நன்மையெங்கும் நிறைந்துவிட நாமெல்லாம் நலமடைய
வாழ வழிவகுப்பாய் சித்தி விநாயகனே.

கிழக்கிலங்கை கோயில் கொண்ட சிவனாரின் புத்திரனே
தமிழ் மக்கள் தலைநிமிர உடனிருந்து அருளிடய்யா
நம்பிக்கை கொண்ட நம்மை நாயகனே காத்திடுவாய்- நம்
தலைதாழா வாழ்வுக்கு பொறுப்பேற்பாய் நாயகனே.

சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை ஒளியேற்றி
எதிர்காலம் மேன்மையுற வழியை நீ செய்திடய்யா
அருகினிலே நீயிருந்து அச்சத்தைப் போக்கிவிடு
நாடுகின்றோம் உன்துணையை சித்தி விநாயகனே.

கிலிகொண்டு துவழும்நிலை இனியெமக்கு வேண்டாமய்யா
வலிந்து வரும் துன்பங்களை முளையிலேயே அகற்றிவிடு
நேர்மையும், வீரமும் நிறைந்த நற்பண்புகளும் சேரவே
வாழச்செய்வாய் சித்திவிநாயகனே.

பார்வதியின் மூத்தமகன் அருகினிலே நீயிருக்க
நாதியில்லை என்றநிலை எமக்கென்றும் இல்லையய்யா
நம்வாழ்வு வளம் பெறவும், நம்முரிமை வலுப்பெறவும்
விரைந்து வந்து அருளிடுவாய் சித்திவிநாயகனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button