செய்திகள்

கிளிநொச்சி – பரந்தன் ஏ9 வீதியை மறித்து பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சி – பரந்தன் ஏ9 வீதியை மறித்து, இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தினால் அந்த பகுதியில் அமைதியின்மை நிலவியுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் ஜனவரி மாதம் முதலாம் திகதி இரவு, கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவத்தில் 24 வயதான குணரட்ணம் கார்த்தீபன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மற்றுமொரு காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், குறித்த இளைஞனின் உயிரிழப்பு நீதிக் கோரி பரந்தன் வர்த்தகர்கள் நேற்றைய தினம் (03) முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாததை அடுத்து, பரந்தன் சந்தியில் இன்று பாரிய போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்ற வேளையிலேயே, பரந்தன் சந்தியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வைத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக, குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர், போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரந்தன் சந்தியில் பொலிஸ் காவலரணொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு தமது உறுதிமொழியை எழுத்துமூலம் வழங்கிய நிலையில், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றது. 

Related Articles

Back to top button