செய்திகள்

களுத்துறை இறைகம் மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி கருமாரியம்மன் திருக்கோயில்

அறம் காத்து ஆதரிக்க அவதரிக்கும் அன்னையே
அல்லலுறும் மக்களுக்கு ஆறுதலைத் தந்திடுவாய்
ஆற்றலைத்தந்தெமது வாழ்க்கை நிலை உயர்ந்திடவே
காவல் செய்து வாழ்வளிப்பாய் கருமாரி அம்மாவே..

களுத்துறை பெருநிலத்தின் இங்கிரிய தோட்டமதின்
இறைகம் மேற்பிரிவில் கோயில் கொண்ட கோமகளே
எமது வளம் பெருகிடவும் உயர்வும்தான் இணைந்திடவும்
துணையிருந்து அருளளிப்பாய் கருமாரி அம்மாவே..

இயற்கை எழில் சூழ்ந்த நிலம் குடிகொண்ட எம் தாயே
சூழவரும் துயரநிலை நெருங்காத நிலை வேண்டும்
வளமான சுகவாழ்வு நிலைத்திருக்க கருணையே வேண்டுமம்மா
மகிழ்வானநிலை நிலைக்க வழி செய்வாய் கருமாரி அம்மாவே..

இடர் தடுத்து நமைக் காக்கும் உத்தமியே எம் தாயே
நம்பியுந்தன் அடிபணிவோர் நலன் காக்க வந்திடம்மா
நம் குலத்தின் நாயகியே, நலன் பேணும் பேரருளே
துணிவுடனே நாமிருக்க விதிசெய்வாய் கருமாரி அம்மாவே..

துன்பங்களைத் துடைத்தெறியும் திறன்கொண்ட தாயவளே
துவளாத மனஉறுதி தந்தெமக்கு அருளிடம்மா
நாளும் உனைத் தொழுது போற்றுகின்ற நம்மை நீ
தலை நிமிர்ந்து வாழவைப்பாய் கருமாரி அம்மாவே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com