செய்திகள்

களுத்துறை- பதுரெலிய லப்பன்துறை டெல்கித்தோட்ட அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்..

களுத்துறை பெருநிலத்தில் கோயில் கொண்ட அன்னை
கவலைகளைப் போக்கிடவே வழிதருவாள் நமக்கு
துணிவுடனே முன்செல்ல அவளருளைப் பெறுவோம்
வாட்டமில்லா நல்வாழ்வை நமக்களிப்பாள் அன்னை முத்துமாரி..
பெருந்தோட்ட சூழலிலே குடியிருக்கும் அன்னை
வெற்றிகளை அடைந்துவிட அருளிடுவாள் நமக்கு
நம்பிக்கையுடன் தொழுது நிற்போம் அவளை
நலந்தந்து காவல் செய்வாள் அன்னை முத்துமாரி
கல்வியகம் அருகுகொண்டு அமர்ந்திருக்கும் அன்னை
கலை வளர்த்து பெருமை செய்வாள் நமக்கு
வளம்பெற்று உயர்ச்சிபெற அவள் துணையை அடைவோம்
வளங்கொண்ட பெருவாழ்வை தந்திடுவாள் அன்னை முத்துமாரி
எமக்கு அருள் செய்யவென்று எழுந்துவிட்ட அன்னை
என்றும் உற்ற துணையிருந்து உறுதி செய்வாள் நமக்கு
எதிர்காலம் வளமடைய அவளடியைத் தொழுவோம்
ஏற்றமிகு உயர்வாழ்வை அடையச் செய்வாள் அன்னை முத்துமாரி
டெல்கித் தோட்டத்திலிருந்து அருள் வழங்கும் அன்னை
நெருங்கி வரும் தீமைகளைத் தடுத்து அரண்செய்வாள் நமக்கு
வருங்காலம் மேன்மையுற வணங்கிடுவோம் அவளை
மாற்றமில்லா நிம்மதியை உறுதிசெய்வாள் அன்னை முத்துமாரி
துணிவுதந்து துயர் துடைக்க குடிகொண்ட அன்னை
துணையாக இருந்து நலந்தருவாள் நமக்கு
நம்பியே வழிபடுவோம் அவளை
எழுச்சி பெற்று உயர்வு பெற உதவிடுவாள் அன்னை முத்துமாரி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button