...
சினிமா

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்.

1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் தனது 86ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

அதிமுக முன்னாள் அவைத்லைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்துக்கு வந்தார். அந்த படத்தில் புலமைப்பித்தன் எழுதிய
“நான் யார்? நான் யார்?”
என்ற பாடல் இன்றளவும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார். குடியிருந்த கோவில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம், உலகம் சுற்று வாலிபன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களான பிரபாகரன், பேபி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் புலமைப்பித்தன் வீட்டில் தங்கி தங்களது பணிகளை செய்ததும் வரலாறு. புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம் என்றுதான் அந்நாளில் புலிகளின் தலைவர்கள் கூறியதை அவரே பல பேட்டிகளில் பதிவும் செய்திருக்கிறார்.

1964-ல் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப்பயணம் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த எலி திரைப்படம் வரை இடைவிடாமல் தொடர்ந்தது.

கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புலமைப்பித்தன், இன்று காலை சிகிச்சை பலனின்றி புலமைப்பித்தன் காலமானார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இடம்பெற்றிருந்த “தாய்மை” பாடலையும் எழுதியது புலமைப்பித்தன் தான். வடிவேலுவின் இம்சை அரசன், தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இவர் கடைசியாக வடிவேலு நடித்த எலி படத்தில் இடம்பெற்ற பாடலை எழுதி இருந்தார். கலைஞர்களின் படைப்பு இருக்கும் வரையில் கலைஞர்களுக்கு எப்போதுமே மரணமில்லை.

எம்ஜிஆர் தொடங்கி விஜய் வரை ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதிய புலமைப்பித்தனின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen