செய்திகள்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் : இடைக்கால அறிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கையளிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு
இடைக்கால அறிக்கை

நிறைவேற்றுச் சாராம்சம் 3

1. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் 4
தற்போதைய நடவடிக்கைகள்

2. சவால்கள் 8

3. நீதியை உறுதிப்படுத்துவதற்கான அரச பொறுப்பு 12
4. இழப்பீடுகளை வழங்குவதற்கான அரச பொறுப்பு 16
5. அவசரமான பரிந்துரைகள் 17
5.1 இடைக்கால நிவாரண முன்மொழிவுகள் 18
5.2 நீதிக்கான பரிந்துரைகள் 21

நிறைவேற்றுச் சாராம்சம்

காணாமற் போனோர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின்போது, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனையைக் குறிக்கிறது. 2016 இன் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டம் (தாபித்தலும் ஃ நிருவகித்தலும்/ பணிகளை நிறைவேற்றுதலும்) சுயாதீன ஆணைக்குழு என்ற வகையில் நிறுவப்பட்டுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் குறிக்கோள்: காணாமற் போனோரைத் தேடுதல்; மற்றும் அவர்களைப்பற்றிக் கண்டறிதல், இத்தகைய சம்பவங்கள் மீள நிகழ்வதைத் தடுப்பதற்குப் பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமற்போனோரினதும் அவர்களது உறவினர்களதும் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையில் உத்தரவாதங்களை மேற்கொண்டு, நிவாரணங்களை வழங்குவதற்கு உசிதமான நடவடிக்கைகளை அறிமுகம் செய்தல் என்பனவாகும்.

2018 மாசி மாதத்தில், ஏழு (7) ஆணையாளர்களின் நியமனத்தோடு அலுவலகத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பிட்ட அலகுகளையும், பிரதேச அலுவலகங்களையும் அமைத்தல் – தாபித்தல், அலுவலகப் பணியாளர்களை ஆட்சேர்த்தல் மற்றும் கொள்கைகள், ஒழுங்குவிதிகள், செயல்முறைகள் என்பவற்றை உருவாக்குதல் என்பன காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நடவடிக்கைளில் உள்ளடக்கப்படும. அதேசமயம், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களோடு பொதுக் கலந்துரையாடலிலும ஈடுபட்டது. அத்தோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரிக்கை விடுக்கும் சந்தர்ப்பங்களில் அந்தரங்கமான சந்திப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன. சட்ட வைத்தியத் தரவுகளை ஆவணப்படுத்துதல் போன்ற விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசியமான விஞ்ஞானரீதியான அறிவைப் பெறுவதற்கு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்களின் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றதோடு, அரச நிறுவனங்கள் மற்றும் சில சர்வதேச நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றது. மேலும், சில விசேட சம்பவங்கள் பற்றிய பரிசீலனைகளையும் மேற்கொண்டது. குறிப்பாக மன்னாரில் கூட்டுப் புதைகுழிகளை அகழ்வதற்கும், தோண்டி எடுப்பதற்கும் அவசியமான உதவிகளை வழங்கியதோடு, காணாமற் போன ஆட்கள்பற்றி நிலவும் அறிக்கைகளைத் தொகுத்து, பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீதும் தாக்கம் செலுத்தும் சட்டரீதியான பிரச்சினைகளைப்பற்றிய பரிந்துரைகளையும், விளக்கங்களையும் தயாரித்துள்ளது.

அதனிடையே, பல ஆண்டுகளாக பௌதீக மற்றும் உளவியல் அழுத்தங்களைச் சுமந்துகொண்டு உயிர்வாழும் பாதிக்கப்பட்ட குடும்பங்களினது தேவைகளின் அத்தியாவசியத் தன்மைகளை சமநிலைப்படுத்தல் உட்பட பல சவால்களை காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் எதிர்நோக்குகின்றது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறிவதிலேயே காணாமற்போன ஆட்களின் குடும்பங்கள் அதிக அக்கறை செலுத்துகின்றன. இதுவரை இது பற்றிய உண்மையான தகவல்களை அரசினால் வழங்க முடியாமையினால் அரசு மீது பாரிய சந்தேகம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மீதும் அவர்களுக்குப் பாரிய நம்பிக்கையீனமே உள்ளது. இக் குடும்பங்களின் பல்வேறு தேவைகைளையும் நிலைப்பாடுகளையும் புரிந்து கொண்டு, அவரகளின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பயனுறுதிவாய்ந்ததாக அமைவதற்கு அரசின் ஏனைய நிறுவனங்களின் நேரடியான ஒத்துழைப்பு அவசியம். காணாமற் போனோரின் உரிமைகள் மீறப்பட்டதற்கு ஈடாக பாதிக்கப்பட்டோரின் இழப்பினை ஈடு செய்வதற்கு ஒரு வேலைத்திட்டம் அவசியமாகும். எனவே, நம்பகத்தன்மை வாய்ந்த முறையில் பயனுறுதிவாய்ந்த இழப்பீட்டிற்கான ஓர் அலுவலகத்தை தாபிப்பதற்கு சட்டங்;களை தயாரிப்பது மிக அவசியமாகும்.

குடும்பங்களின் வருமானத்தை ஈட்டுபவர்கள் காணாமற்போதலினால், அக்குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ள மிகத்துன்பகரமான நிலைமையும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள தேவைகளையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். மேற்படி குடும்பங்களின் தேவைகளே இவ்வறிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. மேற்படி தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கியே பல இடைக்கால நிவாரணங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், குடும்பங்களின் சேமநலனை குறிக்கோளாகக் கொண்டு இந்த இடைக்கால நிவாரணங்;கள் எவவிதத்திலும் இழப்பீடுகளாக அமைய மாட்டாது என்பதை வலியுறுத்த வேண்டும். காணாமற்போன குடும்பங்கள் இந்த இடைக்கால நிவாரணங்களை அரசிடம் இருந்து ஏற்பது அவர்களின் இழப்பீடுகளுக்கு உரித்தான உரிமைகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதனை விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.

அதேசமயம், காணாமற்போன ஆட்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு நீதியை நிலைநாட்ட வேண்டிய ஏற்பாடுகளை காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அடையாளம் கண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பங்குணி மாதத்தில் அரசாங்கம் வலிந்து காணாமற் போகச் செய்தல்மூலம் அனைத்து ஆட்களையும் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையிலான சமவாயச் சட்டத்தை (வலிந்து காணாமற்போகச் செய்தல் பற்றிய சட்டத்தை) அங்கீகரித்தல் மூலம் வலிந்து மேற்கொள்ளப்படும் காணாமற் போகச் செய்தல் குற்றவியல் குற்றமாக அடையாளம் காணுதல், அரசியலமைப்பின் அரச பொறுப்புக்களை வலியுறுத்தி, அதற்கு ஏற்புடைய சட்டங்களை அடையாளம் காணுதல் ஒரு சாதகமான நடவடிக்கை என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

அதே சமயம், வலிந்;து காணாமற் போகச் செய்தல் குற்றவியல் குற்றமாக அடையாளம் காணுதல் மாத்திரம் போதுமானதாக அமையாது. நீதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும் மறுசீரமைக்க வேண்டிய பல துறைகளைப்பற்றியும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். விசேடமாக உரிமைகளை மீறுதல் பற்றிச் செயற்படும் குடும்பங்களும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்;களும்;, துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாவதற்கு எதிராக துரிதமாக உரிய நடவடிக்கை எடுப்பது தாமதமாகின்றது. எனவே, இத்தகைய சவால்களை அகற்றுவது அவசரத் தேவையாகும் என வலியுறுத்துகின்றோம.

1.காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தற்போதைய நடவடிக்கைகள்

1.2018 மாசிமாதம் 28 ஆம் திகதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளருக்கும் ஏனைய உறுப்பினர்களுக்குமான நியமனக் கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஆறு மாத காலத்திற்குள் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறைவேற்றிய பணிகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம். அதன் பிரதான பணிகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான கட்டமைப்புகளும், செயல்முறைகளும் தாபிக்கப்பட்டதுடன் காணாமற்போன ஆட்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2.காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டம் – 2016 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டம் (தாபித்தலும், நிருவகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) இவ்வலுவலகத்தின் முக்கிய நான்கு பணிகளைக் குறிப்பிடுகின்றது.
1) காணாமற்போன ஆட்களைத் தேடுதல் மற்றும் தேடிக் கண்டுபிடித்தல்
2) மேற்படி காணாமற்போன ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சூழமைவுபற்றிய விடயங்கள் மற்றும் அவர்களின் நிலையை தெளிவுபடுத்துதல்
3)காணாமற்போன ஆட்கள்பற்றிய சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இத்தகைய நிகழ்வுகள் மீள நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்புடைய நிறுவனங்களுக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்.
4) உரிய இழப்பீட்டு மார்க்கங்களை அறிமுகப்படுத்துதல்.

3.காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டத்தின்மூலம் நிரந்தரமான அலுவலகம் ஒன்று நிறுவப்படுவதோடு காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் என்போர் யுத்தம், அரசியல் அமைதியின்மை அல்லது சிவில் கிளர்ச்சிகள், கலகங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்குதல் உட்பட்ட சூழ்நிலைகளில்’எவராவது ஓர் ஆளுக்கு ஏற்பட்ட நிலை அல்லது அவர் இருக்கும் இடம் நியாயமான முறையில் அறியவில்லையென நம்புகின்ற அந்த நபர்’ என்ற வகையில் ஒரு நபர் வரைவிலக்கணம் செய்யப்படுகிறார்.

4.காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நெறிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டம், இலங்கையின் தேசிய சட்டங்கள் மற்றும் ஏற்புடைய ஏனைய சர்வதேசச் சட்ட கடப்பாடுகள் வழிகாட்டியாக அமையும்.

1..1.அலுவலகத்தின் நடவடிக்கைகளை செயற்படுத்துதல்

5.அலுவலகத்தின் நடவடிக்கைகளை செயற்படுத்துதல் கா.ஆ.அ உறுப்பினர்களால் உடனடியாக நிறைவேற்றப்பட வேணடியதாக இருந்தது. இதன் பணிகளை அமுலாக்குவதற்கு வேறு அலகுகளை உருவாக்கும்வரை, இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தி, அவர்களை பிரதிபலிக்கக்கூடிய வகையிலும், பயனுறுதிவாய்ந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், நடத்தைக்கோவை, வழிகாட்டிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதற்கு கா.ஆ.அ ஈடுபாடு கொண்டுள்ளது.

கா.ஆ.அ எண்ணக்கரு மற்றும் அமுலாக்கம் என்பன இச்செயல்முறைக்கு ஏற்புடைய தேசிய மற்றும் சர்வதேச சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதோடு. கா.ஆ.அ சட்டம், நல்லிணக்கம் பற்றிய கலந்தாலோசனைச் செயலணி (CTF) மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுப்பாய்வின் அடிப்படையில், ஆலோசனை உட்பட முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படும். கா.ஆ.அ தற்போது தற்காலிகமாக ஊழியர்களை சேவைக்கமர்த்தியுள்ளதுடன், அலுவலகத்திற்கான நிரந்தர ஊழியர்களை ஆட்சேர்ப்பதற்கு அரசாங்கத்திடம இருந்து அங்கீகாரம் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வலுவலகம் தற்காலிகமாக இல.34, நாரஹேன்பிட்ட வீதி, நாவல எனும் முகவரியில் அமைந்துள்ளதுடன் நிரந்தரமான பிரதான அலுவலகத்தை கொழும்பில் நிறுவுவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. அத்துடன், நாடு பூராகவும் உள்ள குடும்பங்கள் இலகுவில் அலுவலகத்தை அணுகுவதை உறுதிசெய்வதற்கு கா.ஆ.அ மூலம் பிரதேச ரீதியாக 12 பிராந்திய அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. மன்னார் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் இரண்டு அலுவலகங்கள் இவ்வாண்டு முடிவடைவதற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டு அவற்றின் பணிகளை செயற்படுத்தும்.

1.2 பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுடன்மேற்கொண்ட கலந்துரையாடல்கள்

6.காணாமல் போனவர்களின் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு கலந்தாலோசிப்பது கா.ஆ.அ பயன்படுத்திய முக்கிய கருவியென நிரூபிக்கப்பட்டது. கா.ஆ.அ நாடுபூராகவும் மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் 2147 நபர்களுடன் ஆறு பொதுமக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கா.ஆ.அ தவிசாளரையும், உறுப்பினர்களையும் சந்திக்க வேண்டுமென எதிர்பார்த்த, காணாமற்போன ஆட்களின் குடும்ப உறுப்பினர்களையும் கொழும்பில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சந்திப்பின் மூலம் கா.ஆ. அலுவலகம், அதன் உத்தேச நடவடிக்கைகள் என்பன பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த முடிந்தது. இது அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது.

குடும்பங்களை நேரடியாகச் சந்திப்பதன்மூலம், அனைத்து இனங்களையும் சார்ந்த குடும்பங்களின் விபரங்களை கேட்டறிவதற்கும் தமது அன்புக்குரியவர்கள் காணாமற் போனமையால் ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவங்களையும், அவர்களின் துன்ப துயரங்களின் அளவையும் அறியமுடிந்தது. ஒரே இனத்தைச் சார்ந்திருந்தாலும், ஒரே பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அவர்களின் மனப்பாங்குகள், தேவைகள், விருப்புகள் என்ற பல்வேறு விடயங்கள்பற்றிய புரிதல்களுக்கு இது சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கியது.

7.மேற்குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் வாழ்ந்துவரும் குடும்பங்களும், சிவில் சமூகக் குழுக்களும் இணைந்து முன்வைத்த பரிந்துரைகளான…

I.மிகவும் கஷ்டமான பிரதேசங்களுக்கு நடமாடும் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படுதல்

II.2009 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போனோர் பற்றிய சம்பவத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுதல்
என்கின்ற பரிந்துரைகளை கா.ஆ.அ கவனத்தில் எடுத்து செயற்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள், அரச நிறுவனங்களுடனான கலந்தாலோசித்தலும் ஒத்துழைப்பும்

8.கா.ஆ.அ தேசிய, சர்வதேச அமைப்புக்கள் மற்றும் காணாமற்போன ஆட்கள்பற்றி கண்டறிதல், புதைகுழிகளைத் தோண்டுதல், மனித எலும்புக்கூடுகளை புதைகுழிகளில் இருந்து வெளியே எடுத்தல், சட்டவைத்திய அறிவியல், மரபு உரிமை விஞ்ஞானம், உளசமூக ஒத்துழைப்பு, சட்டநடவடிக்கைகள், ஆவணப்படுத்தல், தரவுகளை திரட்டி முகாமைத்துவம் செய்தல், மற்றும் சுவடிகள் பற்றிய தேர்ச்சிபெற்ற நபர்களோடு இருதரப்பு மற்றும் கூட்டான கலந்துரையாடல்கள்;;;;; இடம்பெற்றன. கா.ஆ.அ மூலம் காணாமற்போனோர் பற்றிய அலுவலகமாக சமமான கடமைகளைப் புரியும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட – அரச மற்றும் அரசு சார்பற்ற இருதரப்பினரும் குறிப்பாக சர்வதேச நிறுவனங்களின் அனுபவங்கள், கருத்துக்கள், கற்கைகள் மற்றும் யோசனைகள் என்பன பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதேசமயம், அலுவலகம் ஒருசில அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான பங்காளர்களை உருவாக்கியுள்ளது. கா.ஆ.அ க்கான பொதுமக்கள் சந்திப்புக்களை மாவட்டச் செயலகங்கள் ஏற்பாடு செய்தன. இதனைவிட, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் அலுவலகம், சபாநாயகரின் அலுவலகம், தேசிய ஐக்கியத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சு. நல்லிணக்கப் பொறிமுறைகளை கூட்டிணைப்பதற்கான செயலகம் (SCRM)இ சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச தகவல் திணைக்களம் உட்பட்ட அரசாங்க நிறுவனங்களும் ஏனைய பிற நிறுவனங்களினதும் பயனுறுதிவாய்ந்த பங்களிப்பு எமது செயற்பாடுகளுக்கு மிகவும் பிரயோசனமாக அமைந்தது.

1.3 விசாரணையும் தேடலும்

9.கடந்த சில மாதங்களாக கா.ஆ.அ மூலம் சில விசேட சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விசாரணை மேற்கொள்வது உட்பட பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் பாதுகாக்கப்படுதலை உறுதிப்படுத்துவதற்கு அதன் அடிப்படை நடவடிக்கையான புலனாய்வு மற்றும் தேடல் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கா.ஆ.அ மூலம் மன்னார் கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய (சதொச) கட்டிடத்தில் உள்ள கூட்டுப் புதைகுழி தொடர்பாக அவதானிப்பதோடு அவற்றின் அகழ்வாராய்ச்சிகளுக்கும், மனித எலும்புக்கூடுகளை வெளியே எடுக்கும் நடவடிக்கைளுக்குமான நிதி அனுசரணையையும் கா.ஆ.அ வழங்குகிறது. இந்த நடவடிக்கைகளை நேரடியாகவும், தடைகளின்றியும் வெளிப்படைத் தன்மையோடும் தொடர்ச்சியாகவும் முன்னெடுப்பதை உறுதிப்படுத்துவதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் கா.ஆ.அ தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும்.

1.4 சட்டரீதியான மற்றும் கொள்கை ரீதியான இடையீடுகள்

10.நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சட்ட மற்றும் கொள்கை ரீதியான மறுசீரமைப்புக்களுக்கான பங்களிப்பை வழங்குவதன் பொருட்டும் கா.ஆ.அ இடையீடு செய்ததோடு காணாமற்போன ஆட்களின் குடும்பங்களைத் தொடர்ந்தும் சிரமத்துக்கு உட்படுத்தாத வகையில், இச்சட்டங்களையும் கொள்கைகளையும் பற்றி கூடிய புரிதலை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திடீர் மரணங்கள் தொடர்பாக இடம்பெறும்; மரண விசாரணைகளின்போது வருகை தராமைக்கான சான்றிதழ் (Certificates of Absence) தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏற்புடைய உத்தேச சட்டம் கா.ஆ.அ மூலம் மறுசீரமைத்து பரிந்துரை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை சட்ட மறுசீரமைப்புகளில் உள்ளடக்கப்படும்.

1.5 காணாமற்போன ஆட்கள்பற்றிய பெயர்பட்டியலைத் தயாரித்தல்

11.அரச நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சிவில் சமூகங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட காணாமற்போன ஆட்கள்பற்றிய பல்வேறுபட்ட பெயர்ப்;பட்டியல்கள் இருப்பது மிக முக்கியமானதென கா.ஆ.அ அடையாளம் கண்டுள்ளது. இதற்கமைய, எமது அலுவலகத்தின்மூலம் இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கும் அதன் பணிகளை ஏனைய நிறுவனங்களும் தாபனங்களும் இடையீடு செய்யக்கூடிய வகையில் கேந்திர பெயர்ப்;பட்டியலைத் தயாரிக்கும் பாரதூரமான கடமை பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கா.ஆ.அ இதுவரை, முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் உட்பட தற்போதுள்ள அறிக்கைகளை சாராம்சப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

2. சவால்கள்

கடந்த ஆறு மாத காலத்திற்;குள் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பின்வரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது.

2.1 காணாமற்போன சூழமைவு

12.கா.ஆ.அ இன் செயற்பாடுகள் சமூகத்தின் சில பகுதியினரால் காணாமற்போதல் பற்றிய பிரச்சினைகளுக்காக நடவடிக்கை எடுக்கும் அவசியம் கூட கேள்விக்கு உட்படுத்தப்படும் சூழமைவிலேயே அமைந்துள்ளது. ஒருபுறம், யுத்தத்தின் பெறுபேறாக ஏற்பட்ட காணாமற்போதல் பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேவையும் மறுபுறம் கா.ஆ.அ போன்றநிறுவனங்களின் அவசியம் பற்றிய விவாதமும் இடம்பெறுகின்றது, காணாமற்போதல் நிலைபேறான நீதி பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டுப் பொறிமுறைகளின் வரலாற்று ரீதியான இயலாமை மற்றும் அரசதுறையின் மிகக் குறைந்த அர்ப்பணிப்பு என்பன கா.ஆ.அ க்கான கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சுயாதீனமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான ஒரு நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு சமாந்தரமாக, நீதி, உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு மற்றும் நிறுவன மறுசீரமைப்பு உட்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும்;, அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு, விசேட பொறிமுறைகளை அமைப்பதற்காக அரசாங்கத்தை ஊக்குவிக்கும் முக்கியத்துவத்தை கா.ஆ.அ அடையாளம் கண்டுள்ளது.

2.2 குடும்பங்களுக்கும் சிவில் சமூகங்களுக்குமுள்ள அவநம்பிக்கையும் சந்தேகமும்

13.பாதிக்கப்பட்டோரது உறவினர்களின் நம்பிக்கையை வென்றெடுத்தல், பிரதானமாக இவ்வலுவலகம் பயனுறுதிவாய்ந்த, சுயாதீனமான, நம்பகத்தன்மை கொண்ட தேசிய நிறுவனமாக, பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில் நம்பிக்கையை வென்றெடுத்தல், விசேட சவால்மிகுந்ததென காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கண்டறிந்துள்ளது. மனித உரிமைகளை மீறுவதற்கு பரிகாரம் காணுதல் அரச நிறுவனங்களின் இயலுமை மற்றும் விருப்பம், என்பன விசேடமாக பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கிடையே உள்ள ஆழமான வெறுப்பு மனப்பான்மை (Cynicism), காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்த வெறுப்பு மனப்பான்மை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

14.அடிப்படைக் கருத்துக்களை விசாரித்தபோது காணாமற்போன ஆட்கள் பற்றியஅலுவலகம்பற்றிய கலப்புணர்வுகளின் பிரதிபலிப்பைச் சந்திக்க முடிந்தது. ஒருசில குடும்பங்கள் இவ்வலுவலகம் பற்றிய கடும் வெறுப்பு மனப்பான்மையையும் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்தியதோடு, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பின்போது எதிர்ப்பு ஆர்ப்பாடடங்களும் இடம்பெற்றன. மேலும் சிலர் அதிக நம்பிக்கைக்குப் பாத்திரமான சாதகமான பிரதிபலிப்புக்களையும் வெளிப்படுத்தினர். இதன்போது வேறுசிலர் விசேட நிபந்தனைகளை முன்வைத்து, இவ்வலுவலகத்துடன் தொடர்புகொள்ள முயற்சித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு மாற்று வழியின்மையால் அவர்கள் தமது தேவைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான மற்றுமோர் அரச நிறுவனமாகவே காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைக் கருதுகின்றனர்.

அதேசமயம், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்புக்களின்போது தமது வருகையைத் தடுப்பதற்கு எதிர்ப்புக் காட்டுவோர் முயற்சித்த முறையைப்பற்றி சிவில் சமூகங்களுக்கூடாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்குக் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வலுவலகத்துடன்; தொடர்புகொள்வதா? இல்லையா? என்று தமது தீர்மானங்களை மேற்கொள்வதற்கு குடும்பங்களுக்கு உள்ள உரிமை போன்றே அனைத்துக் குடும்பங்களினதும் உரிமைகளை மதிப்பது முக்கியமானதென காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வலியுறுத்துகிறது.

15.இக்குடும்பங்களின் காணாமற்போன உறவுகளை தேடுகையில் அவர்கள் எதிர்நோக்கிய துன்பங்களையும் துயரங்களையும் நீண்டகால பெருமுயற்சிகளையும், ஆணையாளர்கள் புரிந்துகொள்வதோடு, மேற்படி குடும்பங்கள்மூலம் எடுத்துக்காட்டப்படும் துணிவும், திடசங்கற்பமும் பாராட்டுக்குரியது.

16.பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கிடையே பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் பன்முகத்தன்மை, அவர்களின் தேவைகள் மற்றும் பல்வேறு கருத்துக்கள் என்பவற்றை காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் புரிந்துகொண்டுள்ளது. இவ்வலுவலகம் ஆலோசனைகளைப் பெறுவதற்கும், தாக்கத்திற்குள்ளான அனைவரினது பெறுமதிமிக்க தகவல்களை பேணிப்பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்ப்புத்தெரிவித்த மற்றும் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து கொண்டிருக்கின்ற நபர்கள் உட்பட, பாதிப்புக்குள்ளான அனைத்துக் குடும்பங்களுடனும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தன்னை அர்ப்பணித்துள்ளது.

2.3. போதிய விழிப்புணர்வின்மை

17.காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்; அதன் பணிகள்;பற்றி நிலவும் தவறான புரிதலைப்பற்றி அறிந்துள்ளது. இதன்மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசேட குழுக்களைப் புறக்கணிப்பதாகவும், இது ஒரு நீதிமன்ற நடைமுறையாகுமென்ற தவறான நம்பிக்கைகள், இந்தத் தவறான புரிதலுக்குக் காரணமாகும். சில குடும்பங்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும்; காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்; செயற்பாடு பற்றிய புரிதல் அல்லது அறிவு இல்லையென்றே கூறவேண்டும். இத் தவறான புரிதலை இல்லாதொழிப்பதும், இவ்வலுவலகத்தின்; பணிகள் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்மூலம் தொடர்பாடல் மற்றும் பொதுமக்களைச் சென்றடைதல் பற்றிய சிறந்த உபாய மார்க்கத்தைக் கட்டியெழுப்பி, அமுல்படுத்தும் செயற்பாட்டில் அது ஈடுபட்டுள்ளது.

நிருவாகச் சவால்கள்

18.காணாமற் போன ஆட்கள்பற்றிய அலுவலகம் பல்வேறு நிர்வாகச் சவால்களை எதிர்நோக்கியது. காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகத்தின் நடவடிக்கைகள் தாமதமாவதற்கும், மேலதிகமான பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அது அழுத்தத்தைக் கொடுத்தது. முக்கியமான பல அரச நிறுவனங்கள் காணாமற் போன ஆட்கள்பற்றிய அலுவலகத்தை சுயாதீனமான நிறுவனமாக அடையாளம் காணாமை பாரிய சவாலாக அமைந்தது. இதனைப் புரிய வைப்பதற்கு காலத்தை செலவுசெய்ய வேண்டி ஏற்பட்டது. இதனாலேயே சில தாமதங்கள் ஏற்பட்டன.
அதேசமயம் அரசியலமைப்பிற்கான 19ஆவது திருத்தத்தில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களைப் போலவே, இவ்வலுவலகத்தின் தவிசாளரினதும்;;; ஏனைய உறுப்பினர்களினதும் சம்பளங்கள் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டி இருந்தது. உத்தியோகத்தர்களை நியமிக்கும்போதும், பொருட்களின் பெறுகையின்போதும் அனுசரிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்; மற்றும் அங்கீகாரம் தாமதமாகியமை மற்றுமோர் சவாலாகும். காணாமல்போன ஆட்கள்பற்றிய அலுவலகத்தை அரசியலமைப்பிற்கு அமையவும், ஏனைய சட்டங்களுக்கமையவும், சுயாதீனமான நிறுவனமாக அடையாளம் காண்பது அதன் பயனுறுதிவாய்ந்த செயற்பாட்டிற்கு அத்தியாவசியமாகும்.

2.5 தொடர்ச்சியான துன்புறுத்தல்களும் வன்முறைகளும்

19.காணாமற் போனோரினதும் காணாமல் ஆக்கப்பட்டோரினதும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பல்வேறு வன்முறைகள் மற்றும் தொந்தரவுகள் தொடர்பாக, காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகம் அறிந்துள்ளது. கடந்தகால ஆணைக்குழுக்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான ஆலோசனை செயலணிக்கு கிடைத்துள்ள, பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கமைய பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெண் உறுப்பினர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கும், பல்வேறு இலஞ்சங்களுக்கும் ஆளானார்கள் என்று அறிக்கையிடப்பட்டிருந்தது.

சில காணாமற்போனோரினதும், காணாமல் ஆக்கப்பட்டோரினதும் குடும்ப உறுப்பினர்கள், காணாமற் போனோர் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு அல்லது சில நிருவாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, பாலியல் இலஞ்சம் கோரப்பட்ட சந்தர்ப்பங்களும் அறிக்கையிடப்பட்டிருந்தன. 2018 ஆடி 06 ஆம் திகதி அடையாளம் காணப்படாத ஒரு குழுவினால் திருமதி அமித்தா பிரியந்தி, அளுத்கம பிரதேசத்தில் தாக்குதலுக்கு ஆளானார். அதேசமயம் 2018 ஆடி 13 ஆம் திகதி வட்டுக்கோட்டை பிரதேசத்தில் திருமதி ஸ்ரீசோபனா யோகலிங்கம் தாக்கப்பட்டார். இவ்விடயங்கள் தொடர்பாக எமது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தொடர்ந்தும் இடம்பெறும் அச்சுறுத்தல்கள்பற்றிய முறைப்பாடுகள் பாதிக்கப்பட்டோரகள், பிரதிவாதிகள், உறவினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சாட்சிகள் ஆகியோர் எதிர்நோக்கிய பிரச்சினைகளாகும். அரசின் நீதிபரிபாலன செயல்முறை தொடர்பான நம்பிக்கை வீழ்ச்சியடைவதற்கும், இவை காரணமாக அமைந்துள்ளன என நாம் நம்புகிறோம்.

அவசரமானதும் சிக்கலானதுமான பொறுப்புக்கள்

20.அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு தாமதித்தமையும், காணாமற்;;போனோரினதும் காணாமல் ஆக்கப்பட்டோரினதும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யவதற்கும் காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகச் சட்டம் சட்டமாக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாகும். எவ்வாறாயினும் மீண்டும் நம்பிக்கை முறிதல் இடம்பெறக் கூடாது என்பதன்பொருட்டு மிகவும் பயனுறுதிவாய்ந்த, கூருணர்வு கொண்ட செயல்முறையின் கட்டமைப்பினதும் அவசியத்தைப் புரிந்துகொண்டு விழிப்புணர்வுகொண்ட கூருணர்வு செயல்முறையை அனுசரிக்கும் தேவையை காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகம் புரிந்துகொண்டுள்ளது.

காணாமற்போன ஆட்களைப்பற்றி தேடுதல் நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள பிற சர்வதேச அமைப்புக்கள்மீது கவனம் செலுத்தும்போது அவர்களின் பணிகளை நிறைவேற்றுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒப்படைக்கப்பட்ட பணிகளின் சிக்;;கலான தன்மையைப் புரிந்துகொண்டு காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகம் நிலைபேறான நம்பகத்தன்மை வாய்ந்த கட்டமைப்பு என்பதையும், சிறந்த வழிமுறைகளுடன் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சிகளினிடையே இடைக்கால நிவாரணங்களை வழங்க நாம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அடையாளம் கண்டுள்ளோம்.

2.6 மிக முக்கியத்துவம் வாய்ந்த சாட்சிகளை இழக்க நேரிடுதல்

21.நிர்மாணப் பணிகளின்போதும் விவசாயப்பணிகளைப் போலவே ஏனைய அகழ்வு நடவடிக்கைகளின்போதும் மனித உடல்களின் அவயவங்களைக் கண்டுபிடித்தல் தொடர்பாக காலத்திற்குக் காலம் தகவல்கள் அறிக்கையிடப்படுகின்றன என்பதை நாம் கண்டோம். அநேகமான சந்தர்ப்பங்களில் இத்தகவல்கள் பொலிஸாருக்கோ அல்லது ஏற்புடைய அதிகாரிகளுக்கோ அறிக்கையிடப்பட்டு இருக்கவில்லை. எனவே, இத்தகைய சந்தர்ப்பங்களின்போது பொதுமக்களைப் போலவே அரச நிறுவனங்களும் மிகத்; துரிதமாக செயற்படும் தேவை வலியுறுத்தப்படுகிறது.

03. நீதியை உறுதிப்படுத்துவதற்கான அரச பொறுப்புக்கள்

22.காணாமற்போனோரின் உரிமைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது நீதியை நிறைவேற்றுதல் முக்கிய அரச பொறுப்பாகுமென காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகம் நம்புகிறது. வலிந்து மேற்கொள்ளப்பட்ட காணாமல் ஆக்கப்படுதலுக்கு ஏற்புடைய பொறுப்புக் கூறவேண்டியவர்கள் நீதியின் முன்னால் சமர்ப்பிக்கப்படுதல், காணாமற் போனோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணங்களை வழங்கும் அத்தியாவசியமான நடவடிக்கையாக மாத்திரம் அல்லாமல் அது ஒட்டுமொத்த சமூகம் என்ற வகையில் முக்கியத்துவம் வகிக்கிறது.

ஏனெனில், நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்படுதல் குற்றவியல் குற்றமாகக் கருதப்பட்டு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. இத்தகைய குற்றவியல் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது தற்போது சட்டத்தினால் வலுவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தண்டனை பெறுவதிலிருந்து விடுவிக்கும் சந்தர்ப்பம் தற்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதியை நிலைநாட்டும் பொறுப்பு இலங்கையின் சட்டவாக்கங்கள் மூலமும் உள்நாட்டு சட்டங்கள்மூலமும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சமவாயங்கள் உட்பட சர்வதேச சட்டத்தின் மூலமும் வலியுறுத்தப்படுகிறது.

முன்னர் நடைமுறையில் இருந்த ஆணைக்குழுக்கள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணி மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்ற விடயத்தோடு தொடர்பான உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்ம் ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்ட வழக்குகளை பராமரிப்பதற்கும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய சந்தர்ப்பங்களின்போது பொதுமக்களைப் போலவே அரச நிறுவனங்களும் மிகத்; துரிதமாக செயற்படும் தேவை வலியுறுத்தப்படுகிறது.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தெடரும் அதிகாரம் கிடையாதபோதிலும் காணாமற்போதல் பற்றி அறிக்கையிடும் சந்தர்ப்பங்களில அது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், காணாமற் போதலுக்கு அப்பால் உள்ள குற்றவியல் குற்றம் அறிக்கையிடப்பட்டால் ஏற்புடைய சட்டத்தை அமுலாக்கும் மற்றும் வழக்குத் தொடரும் அதிகாரமுள்ள நிறுவனங்களுக்கு மேற்படி சம்பவத்தை அறிக்கையிடுவதற்கும் கடப்பாடு கொண்டுள்ளது.

3.1 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய சட்டம்

23.2017 மார்கழி 17 ஆம் திகதி இலங்கை ‘அனைத்து ஆட்களையும் வலிந்து காணாமற் போகச் செய்தலுக்கு எதிரான சர்வதேச சமவாயத்தில்’ கைச்சாத்திட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தினமான ஆவணி 30 ஆம் திகதி நினைவு கூறப்படும்போது, அது இலங்கையில் விசேடமாக முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாண்டில் இலங்கை மேற்படி சமவாயத்தை வலுவாக்கம் செய்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முதல்முறையாக நினைவு கூறியுள்ளது.

24.வலிந்து காணாமற்போகச் செய்தலுக்கு ஏற்புடைய பொறுப்பு, உள்நாட்டு சட்டத்தொகுதியில் 2018 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க சட்டத்தின்மூலம் அனைத்து ஆட்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச சமவாயச் சட்டம் (வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்டமூலம்) உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை நடவடிக்கை காணாமற்போனோர் பற்றித் தேடுதலும், அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதுமாகும். காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும் மேற்படி பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இச்சட்டத்தின்மூலம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மேலும் சக்திபெற்றுள்ளது. காணாமற் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றியும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகள் பற்றியும் அதிகளவில் உறுதிப்படுத்தப்படுகிறது.

25. மூன்று தசாப்தங்களாக பாதிக்கப்பட்டோர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றுமு; அரசியல் செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமற் போகச்செயயப்படுதலை குற்றவியல் குற்றமாகுமென ஸ்தாபிக்குமாறு கோரினர். நடைமுறையில் உள்ள உள்நாட்டு சட்டத்தின்மூலம் கடத்தப்படுதல் குற்றமாகக் கருதப்பட்டாலும், வலிந்து காணாமற்போகச் செய்தல் குற்றவியல் குற்றமென நிறுவப்படுதலும், இதுதொடர்பாக வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே, வலிந்து காணாமற்போகச் செய்தல் குற்றவியல் குற்றமாக நிறுவுதல் இதற்கென முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விசேடமான திருப்புமுனையாகும்.

26.அனைத்து நபர்களையும் வலிந்து காணாமற்போகச் செய்தலுக்கு எதிரான சர்வதேச சமவாயத்தில் இலங்கை கையொப்பமிட்டதையும், அதனை உள்நாட்டுச் சட்டத்தில் சேர்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும் நாம் பாராட்டுகின்றோம். அதேசமயம், ஏனைய அரச நிறுவனங்கள் வலிந்து காணாமற் போகச் செய்தல் குற்றவியல் குற்றமாகக் குறிப்பிடும் உள்நாட்டுச் சட்டம் தொடர்பாக மேற்கொண்ட கவனிப்பு போதியதாக அமையவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு ஏற்புடைய குற்றவியல் குற்றத்தை வரைவிலக்கணம் செய்யும் சட்டத்தைத் தயாரிப்பதற்கு முன்னர் இருந்தே இக்குற்றத்தின் சில அடிப்படை அம்சங்கள் இருந்து வந்ததென்பதையும், குற்றத்தின் தொடர்ச்சியான வடிவத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் ஆக்கப்பட்டமை இச்சட்டம் இக்குற்றத்தோடு பங்கேற்கக்கூடிய குற்றவாளிகளை முழுமையாக உள்ளடக்கக் கூடிய வகையில் தயாரிப்பதில் தோல்வி கண்டுள்ளது.

இச்சட்டத்தின்மூலம் கட்டளைப்பொறுப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படவில்லையென்பதுடன் வலிந்து காணாமல் ஆக்குதல் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றமாகவும் அடையாளம் காணப்படவில்லை. முன்னர் அமுலில் இருந்த ஆணைக்குழுக்களினால் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பரந்துபட்ட வகையில் மோதல் நிலவிய பிரதேசங்களிலும், அவற்றிற்கு வெளியேயும் இடம்பெற்றதென வலியுறுத்தப்படுகிறது. மேலும், இச்சட்டமானது முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிற்குள்ள அதிகாரம் போலவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும் உள்ளதென்பதை அடையாளம் காணவில்லை.

3.2 விசாரணைகளும் வழக்குத் தொடுத்தலும்

27.அரசின் நடத்தைக் கோலத்தின்மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்பற்றி நீண்டகாலமாக தண்டனையில் இருந்து விலக்களிக்கும் வகையில் செயற்பட்டிருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் வலியுறுத்துகிறது. முன்னர் செயற்பட்ட ஆணைக்குழுக்களும், நல்லிணக்கப் பொறிமுறை கலந்தாய்வுச் செயலணி அறிக்கையிட்டதன்படி இத்தகைய செயற்பாடுகள் போலியான முறைப்பாடுகளைஅறிக்கையிடுதல் அல்லது முக்கிய தகவல்களை மூடிமறைத்தல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிமைகளை மீறுவதற்கு ஏற்புடைய, நம்பகத் தன்மைவாய்ந்த சாட்சிகள் இருந்தபோதிலும் விசாரணை செய்வதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் இயலாமை மற்றும் விருப்பமின்மையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

28.வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் விசேடமாக இராணுவத்தையும் பொலிசாரையும், சார்ந்த பொறுப்பு வாய்ந்த பலம்பொருந்திய இடங்களைச் சேர்ந்தவர்களின்போது விசாரணைகளின்போது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியவர்கள் இருப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்த இராணுவ உத்தியோகத்தர்களுக்கு தொந்தரவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன.

கடத்தப்படுவதற்கும், காணாமல் ஆக்கப்படுவதற்கும் ஏற்புடைய ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஓர் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட உத்தியோகத்தர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்படாமல், ஆயுதப்படைகளில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு மற்றுமோர் சம்பவத்தில் ஓர் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட சந்தர்ப்பமும் காணாமற் போன பற்றிய அலுவலகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கும் ஒழுங்குவிதிகளுக்கு அமையவும், நியாயமான நடைமுறைக்கு அமையவும் அத்தகைய உத்தியோகத்தர்களின் சேவை, இடைநிறுத்தப்படுவதும் ஏற்புடைய உத்தியோக நிலைமைகளில் பணியாற்றுவது நீக்கப்படுவதும் நியாயமான எதிர்பார்ப்பாகும்.

29.பல்வேறு நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்குமேல் நீடித்திருக்கும வழக்குகள் இருந்த போதிலும் மேற்படி வழக்குகளின் பாதிககப்பட்டோருக்கு காணாமற் போனோர் பற்றிய எதுவிதத் தகவல்களையும் இன்னும் பெற முடியவில்லை. இந்த வழக்குகளுக்கிடையே ஆட்கொணர்வு, கடத்தப்படுதல் மற்றும் கொலை வழக்குகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

30.இத்தகைய வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடரும், வழக்கைப் பராமரிக்கும் நிறுவனமாகவும், மற்றுமோர் சந்தர்ப்பத்தில் ஆட்கொணர்வு மனு போன்ற விடயங்களில் பிரதிவாதிகளின் சார்பிலும்; முன்னிலையாக நேரிடுகிறது. இதனால் உரிமைகளுக்கிடையே மோதல் உருவாக்கப்பட்டுள்ளதோடு ஆட்கொணர்வு வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் உரிமைகளைப் பேணிப்பாதுகாக்கவும், அவற்றை மேம்படுத்தும் பிரவேசத்தையும், அரசின் உரிமைகளுக்காகவும் தோற்றுவதைத் தவிர, பிரதிவாதிகளின் சார்பில் தோற்றக் கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்குகளின்போது பல்வேறு வகையிலான அடிப்படை எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதற்கு தடைசெய்யும் சந்தர்ப்பங்களுக்கு உட்பட்டுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்படுதல் அந்தந்தத் தரப்பினருக்கு அரசியலமைப்பு ஏற்பாடான ஆட்கொணர்வு மனுவைப் பராமரிப்பதில் தடைகள் ஏற்படக்கூடாதென அறிவிக்கப்படுகிறது.

31.ஏற்கனவே செயற்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் கலந்தாலோசனை செயலணி (CTF) இந்த கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பான மிக முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதோடு, அத்தகைய இரண்டு ஆணைக்குழுக்கள் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சுயாதீனமான வழக்குகளை நெறிப்படுத்தும் அவசியம் பற்றியும் பரிந்துரைத்துள்ளது. மேலும் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ 1 இலக்கத்தின்மூலமும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டமை மற்றும் மனித உரிமை மீறப்பட்டமை என்பவற்றுக்கு ஏற்புடைய தனியான விசாரணைகளை நடத்தும் வழக்குகளைத் தொடரும் பொறிமுறையை உருவாக்குவதற்கான அரச பொறுப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.

3.3 விலக்கத்தக்கவை

32.வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக மேலும் சட்டரீதியான மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புக்கள் அவசியமென்பதை காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகம் குறிப்பிடுகிறது. வலுக்கட்டாயத்தின் பேரில் கைதுசெய்தல், தடுத்து வைக்கப்பட்டோருக்கு எதிராக மேற்கொள்ளும் தொந்தரவுகள், குரோதமான கவனிப்பு மற்றும் கைது செய்யப்பட்டிருக்கும்போது உயிரிழத்தலுக்கு ஏற்புடைய தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. 2016 ஆணி மாதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுப்பில் உள்ளோரின் உரிமைகள்பற்றி பாதுகாப்புப் படையினருக்கு கௌரவ மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கட்டளைகளின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துகின்றோம். தடுப்புக் காவலில் உள்ளோரின் பெயர்ப்பட்டியலை பராமரித்தலும், அனைத்து தடுத்து வைக்கப்படும் அமைவிடங்களை வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடுவதும் அரசின் பொறுப்பாகும்.

4. இழப்பீடுகளை வழங்குவது தொடர்பான அரசின் பொறுப்பு

33.காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமற்போன, வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்களின் உறவினரகள் எதிர்நோக்கும், பௌதீக உளவியல் சமூக மற்றும் பொருளாதார இழப்புகள் பற்றி அறிந்து வைத்திருப்பதோடு மேற்படி குடும்பங்களுக்கான இழப்பீடுகளை வழங்குதல் மேற்படி குடும்பங்களுக்கு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த காணாமற்போன சமூகத்திற்கும் அச்சமூகத்தின் நிலைபேறான தன்மைக்கும் சிறந்த இருப்பிற்கும் முக்கியமாகும்.

34.காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகம், காணாமற் போயுள்ள, வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்களின் சகல உறவுகளும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பதோடு, பெரும்பாலான காணாமல் போனோர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்; உறவினர்களின் சுகாதாரம், சொத்துக்கள், வீடுகள் மற்றும் கல்வி ஆகிய சமூக பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் கடுமையாக மீறப்படுதல் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

35.காணாமற்போன பெரும்பாலான குடும்பங்களின் சகல உறவுகளும் 30 வருடங்களுக்கும் மேலாக எவ்வித துணையோ உதவியோ இன்றி, பாரிய வேதனைகளுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சில குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு இடையிடையே அரச ஒத்துழைப்பு கிடைத்;துள்ளது. தனது குடும்பத்தைப் பராமரிப்பவர்களை மேற்படி குடும்பங்கள் இழந்துள்ளன. அதேசமயம், இதற்கு மேலதிகமாக அனேகமான குடும்பங்களுக்கு காணமற்போனோர் தொடர்பில் உரிமைகோரப்படக்கூடிய நலன்புரி வசதிகள், வேதனங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான சந்தர்ப்பங்களும் மறுக்கப்பட்டுள்ளன. சில குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய வறுமை தொடர்பாக காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகம் வலியுறுத்துகிறது. இவர்களில் அதிகமானோர் மிகமோசமான வறுமைக்கோட்டில் வாழ்கின்றனர். இவை அனைத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலின் விளைவுகளாகும். அதேசமயம் இவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் தமக்குள்ள அனைத்து செல்வத்தையும் நேரத்தையும், உழைப்பையும் தமது அன்புக்குரியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு செலவு செய்துள்ளனர். இதன் நேர்விளைவே அவர்கள் பாரிய வறுமைக்கு உள்ளாக்கப்படுவதற்கு காரணமாகும்.
36.காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்போது ஒரே தடவையில் செலுத்தப்படும் நஷ;ட ஈடு, வீட்டுவசதி, தொழில்வாய்ப்புக்கள், கல்வி என்பவற்றிற்கான ஒததுழைப்பும சமூக உளவியல் ஒத்துழைப்பும், சுகாதார வசதிகள் மற்றும் ஞாபகார்த்த தினங்கள் என்பவற்றை மறுசீரமைத்தல் ஆகிய பல்வேறு வகையான தேவைகள் முன்வைக்கப்பட்டன.

இழப்பீடுகளுக்கான ஒரு முறைமை என்பன காணாமற் போனோரைக் கண்டுபிடிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான நபர்கள் என்போரால் முன்மொழியப்பட்டது. சமூக உளவியல் ஒத்துழைப்பு சுகாதாரசேவை என்பவற்றை வழங்குவது மற்றும் நினைவுகூரல் பொதுமக்களின் பிரகடனத்தின்மூலம்;;; பாதிக்கப்பட்டோருடன் நெருக்கமான உறவை வைத்து அவர்கள் இதுவரை அனுபவித்து வந்த தனிமை மற்றும் வேதனைகள் என்பவற்றைக் குறைக்க முடியும்.

நாம் முன்வைக்கும் இப்பரிந்துரைகள் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களாலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களோடும் சிவில் சமூகம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடி அவற்றின் அடிப்படையில் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டன. இப்பரிந்துரைகள் இடைக்கால நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்புடைய மட்டுப்படுத்தப்பட்ட கால எல்லைக்குள் செயற்படுத்தப்பட வேண்டும். இப்பரிந்துரைகள் உண்மையைக் கண்டறிவதற்கான அவர்களுக்கு உரித்தான உரிமைக்கு உத்தரவாதமளிக்கும், அங்கீகாரமளிக்கும் அதேசமயம் இடைக்கால நிவாரணங்களைப் பெறுவதும் இழப்பீடுகளுக்கான உரிமையையும், நீதியையும் உறுதிப்படுத்தும் அதேவேளை பாதிக்கப்பட்டோரின் நிரந்தரமான நீதியை பெற்றுக்கொள்வதில் எவ்விதமான தடைகளையையும் ஏற்படுத்த மாட்டாது என்பதனை பாதிக்கப்பட்டோருக்கு நாம் முழுமையாக உத்தரவாதப்படுத்த வேண்டும்.

4.1 இழப்பீடுகளை வழங்குவது தொடர்பான சட்டரீதியான கடப்பாடுகள்

37.பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமையால் ஏற்பட்ட வேதனையை ஆற்றுப்படுத்துவதையே இழப்பீடுகள் இலக்காகக் கொள்ள வேண்டும். இழப்ப்Pடு என்பதில் இயல்பு நிலைக்கு கொண்டுவருதல், நஷ;டஈடு, புனர்வாழ்வு மற்றும் மீள் நிகழாமைக்கான உறுதிமொழி என்பன உள்ளடக்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இலங்கைக்குப் பொறுப்புண்டு.

38.இலங்கையின் உள்நாட்டுச் சட்டத்தின்கீழ், 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிக்காரர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்மூலம், பாதிக்கப்பட்டோர் அனுபவித்த இழப்புக்கள் தொடர்பாக இழப்பீடு செய்யும் பொறுப்பு உண்டு. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டத்தின்மூலமும், நீதிமன்றத்தின் மூலமும் காணாமல் ஆக்கப்பட்டோர், பாதிக்கப்பட்டோருக்கு நஷடஈட்டை வழங்குமாறு கட்டளையிடலாம்.

39.உத்தேச இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மூலம் நெருக்கடிகளின்போது பாதிப்புக்குள்ளானவர்களும் சகல காணாமற் போனோர் பற்றியும் இழப்பீடுகளைச் செய்யும்போது விசேடமான பணிகள் நிறைவேற்றப்படும். பாரதூரமான பொறுப்புக்களும் அமுலாக்கும் பாரிய அதிகாரமும் கொண்ட சுயாதீனமான அலுவலகம் அவசர தேவையாக உள்ளது. காணாமற்போன ஆட்கள்பற்றிய அலுவலகம் இழப்பீடுகளுக்கான அலுவலகவரைவும் சக்திமயப்படுத்துமாறும் அதனைச் சிறப்பாக அங்கீகரிப்பதை உறுதிப்படுத்துமாறும் அதனை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது.

5.அவசரமான பரிந்துரைகள்

40.காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிரதான நோக்கம் ஏற்புடைய அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதும், காணாமல் போதல் பற்றிய சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும், பாதிக்கப்பட்டோரினதும் குடும்பங்களினதும் உச்ச நன்மையை மையப்படுத்திய நிவாரணம் வழங்கும் வழிமுறையை அறிமுகப்படுத்துவதுமாகும். குறிப்பாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், நினைவுகூரல், இழப்பீடுகள் மற்றும் மீள்நிகழாமையைப் பொறுப்பேற்கிறது. அதேசமயம் சட்டரீதியான மறுசீரமைப்புக்கள் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் அதிகாரம் கொண்டுள்ளது. மேலும் காணாமற் போனோர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், மற்றும் இராணுவ நடவடிக்கைகளின்போது காணாமற் போனோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணம் மற்றும் நலன்புரி வழிமுறைகளை முன்மொழிவதற்கும், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகச் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

41.காணாமற் போனோரினதும், கண்டுபிடிக்க முடியாதவர்களினதும் குடும்பங்களினதும்; தற்போதைய சமூக பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. இறுதியான இழப்பீடுபற்றிய வழிமுறையை ஆரம்பிக்கும்வரையும் அவர்களால் எவ்வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின்போது காணாமற்போனோரின் குடும்பங்களுக்காக அவசரமான மற்றும் அண்மித்த நிவாரணங்களாக இடைக்கால நிவாரணங்களை வழங்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

42.மேலதிகமாக வலிந்து மேற்கொள்ளப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிப்பதுபற்றி கவனிக்காது இருக்கமுடியாத கோரிக்கை நிலவுகிறது. இவை கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றவியல் குற்றங்கள் அல்ல. காணாமற்போனோர் மற்றும வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின்போது காணாமற்போன குடும்ப உறவுகளுக்கு காணாமற்போனோர் பற்றி ஏதாவது தகவல்கள் வழங்கும்வரை தொடர்ச்சியாக நிலவும் குற்றவியல் குற்றங்களாகும். எனவே, அரசு போதிய சட்ட வரம்பை சிருஷ;டிக்கும் குறித்துரைக்கப்பட்ட அரச செயற்பாட்டாளர்களை விசாரணை நடவடிக்கைகளுக்காக வழக்குத் தொடர்ந்து பராமரிப்பதற்கு சக்தியூட்ட வேண்டிய அவசர தேவையுள்ளது.

5.1 இடைக்கால நிவாரண முன்மொழிவுகள்

43.காணாமற்போன ஆட்கள்; பற்றிய அலுவலகம் நிவாரணங்களையும் இழப்பீடுகளையும் பற்றிய மாற்றம் தொடர்பாக வலியுறுத்துகிறது. நிவாரணம் என்பது ஒடுக்குமுறைக்கு உட்பட்டோர் பொருளாதார சமூக மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் ஏனைய பொறுப்புக்களில் இருந்து விடுவித்து அவர்களை அமைதிப்படுத்துவதற்கு வழங்கும் அவசர உதவிகளாகும். இவை எந்த வகையிலும் இழப்பீட்டுக்கான உரிமைகளுக்கு தடையாகவோ அல்லது இழப்பை யதார்த்த நிலைக்கு கொண்டுவருவதற்கான, மேற்படி உரிமைகளை இல்லாதொழிப்பதற்கான காரணியாகவோ அமைவதில்லை.
44.நிவாரணங்களை வழங்குவது உரிய போதுமான பயனுறுதி வாய்ந்த இழப்பீட்டிற்கான உரிமையை எந்தவகையிலும் இல்லாதொழிக்காததோடு நீதிமன்ற நடவடிக்கைமூலம் வகைப்பொறுப்புக்கு உட்படுத்துவதற்குரிய உரிமைக்கு எதுவிதமான மட்டுப்பாட்டையும் ஏற்படுத்த மாட்டாது. முன்னைய நட்டஈடு வழங்கும் நடவடிக்கைமூலம் பாதிக்கப்பட்டோருக்கிடையே நம்பிக்கையீனம் ஏற்படுவதற்கும் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசுக்குள்ள விருப்பம் தொடர்பாக சந்தேகமும் உருவாகியுள்ளது.

45.நாம் முன்வைக்கும் பிரேரணைகள் சார்பில் ஏற்புடைய அரச கொள்கைகளை உடனடியாகத் தயாரிப்பதைக் கவனததில் எடுத்து, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பின்வரும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கின்றது.
(அ)நிதி உதவி வேலைத்திட்டம்: நிதி உதவி வேலைத்திட்டத்தைத் தயாரித்து, நிரந்தரமான வருமான மார்க்கம் இல்லாத காணாமற்போனோர் / வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவ நடவடிக்கையின்போது காணாமற் போனோரின் உயிர்வாழும் மனைவி /பிள்ளை / பிள்ளைகள் ஃமற்றும் உயிர்வாழும் பெற்றோரில்
ஒருவருக்கு / மாதாந்த வாழ்க்கைக் கொடுப்பனவாக 6,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தல். இது இடைக்கால நிவாரணமாக வழங்கப்படுவதோடு இறுதியாக இழப்பீடு வழங்கப்பட்ட பின்பு இது நிறுத்தப்படும்.

(ஆ)கடன்நிவாரண வேலைத்திட்டம்: காணாமற்போன, கண்டுபிடிக்க முடியாதவர்களின் குடும்பங்களை தனியான ஒரு பிரிவின்கீழ் உள்ளடக்கி
(அ) நிதியமைச்சு தீர்மானிப்பதற்கேற்ப கடன் கட்டுப்பாட்டில் இருந்து நீக்குதல் (உதாரணமாக தேறிய நிதிக்கடன்)
(ஆ) பொருளாதார நிலையான தன்மை மற்றும் சுயதொழில் முயற்சியின் மேம்பாட்டிற்காக நிதியமைச்சின்கீழ் செயற்படும் ‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா’ கடன் முன்மொழிவுமூலம் கடன்வழங்குதல்.
(இ)வீடமைப்பை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம்: காணாமற்போன மற்றும் கண்டுபிடிக்க முடியாதோரின் குடும்பங்கள் தனியான பிரிவின்கீழ் உட்படுத்தி வீடமைப்பு அமைச்சின்கீழ் வீடமைப்புக் கருத்திட்டத்திற்கமைய வீடுகளை வழங்குதல் அல்லது பகுதி பூர்த்திசெய்யப்பட்ட வீடுகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குதல்.

(ஈ)கல்விக்கான ஒத்துழைப்பு வழங்கும் வேலைத்திட்டம்: காணாமற்போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளுக்காக அவர்களின் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியைப் பூரணப்படுத்துவதற்கு அத்தியாவசியமான செலவுகளுக்காக கல்வியமைச்சின் கீழ் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தை உருவாக்கி மாதாந்தம் 2,000 ரூபாய் நிதிஉதவி வழங்குதல்.

(உ)தொழிற்பயிற்சி மற்றும் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் வேலைத்திட்டம்: தொழில் செய்யும்போதே, பயிற்சியும் உள்ளடக்கப்பட்ட தொழிநுட்ப பயிற்சிப் பாடநெறியை அறிமுகப்படுத்துதல்.

(ஊ)தொழில் வாய்ப்புக்கான ஒதுக்கீடு: விசேட தொழில்வாய்ப்பை வழங்குவதற்கு ஒரு வீதத்தை ஒதுக்கி அவசியமான தேர்ச்சியுடன்கூடிய காணாமற்போன, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான அரச துறையின் தொழில்வாய்ப்புக்களை ஒதுக்குதல்.

46.இந்த நிவாரணங்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகச் சட்டத்தின் பொருள்கோடலுக்கமைய காணாமற்போன, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாத்திரம் அல்லாது, போருக்குப் பின்னர் காணாமற்போன, சிவில் குழப்பங்களின்போது காணாமற்போனோரும்; உள்ளடக்கப்படுவர். இந்த நிவாரணங்கள் அநேகமாக அழுத்தங்களுக்கு உள்;ளான ஒரு பிரதான குடியிருப்பாளர் மாத்திரம் இருக்கும் குடும்பஙகள், பிள்ளைகள் உள்ள குடும்பங்கள், தங்கிவாழ்வோர் உள்ள குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள் உள்ள குடும்பங்கள், மற்றும் வயோதிபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் உள்ள குடும்பங்கள் ஆகியோருக்கான விசேட கவனிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு பரிந்துரைக்கப்படுகிறது.

5.2 நீதிக்கான பரிந்துரைகள்

47.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான அவசரத்தேவைகளைப் புரிந்து கொண்டு, தகுதியானதும் பயனுறுதிவாய்ந்ததுமான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரும் செயல் முறையை உறுதிப்படுத்துவதற்கு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பின்வரும் பரிந்துரைகளைப் பரிந்துரைக்கின்றது:

வலிந்து காணமல் ஆக்கப்பட்டமை தொடர்பான சட்டத்தை வலுவாக்கம் பெறச்செய்தல்

அ)வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களின் தொடர்ச்சியை அடையாளம் காண்பதும் குற்றவியல் குற்றச்; சட்டம் அமுலாவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களின் உள்ளடக்கங்களை சேர்;த்தலும்;.

ஆ)சட்டத்தின் 3வது வாசகத்தைத் திருத்தி அனைத்து வகை குற்றவியல் குற்றவாளிகளையும் உள்ளடக்கக் கூடிய வகையிலும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை உள்ளடக்கக்கூடிய வகையிலும் சட்டத்தைத் திருத்துதல்.
இ) வலிந்து காணாமலாக்கப்படுதலை மனிதத்துவத்திற்கு எதிரான குற்றமாக அடையாளம் காணுதல்

ஈ) சட்டத்தின் 3(3) வாசகத்தை திருத்தி சகலவிதமான கட்டளையிடும் பொறுப்புக்களை உள்ளடக்குவதுடன் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்படும் கட்டளைகளை உள்ளடக்குதல்.
உ)சட்டத்தின் 15(3) வாசகத்தைத் திருத்தி காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனும் ஏனைய சட்டங்களை அமுலாக்கும் நிறுவனங்களுடனும் இணைந்து தனிநபர் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் அமைவிடங்களுக்கு பிரவேசிப்பதற்கான உரிமையை வழங்குதல்.

ஊ)சட்டத்தின் 15வது வாசகத்தைத் திருத்தி தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர்களை உத்தியோகபூர்வப் பதிவேட்டில் சேர்த்துக் கொள்வதற்கான திட்டவட்டமான கால எல்லையை நிர்ணயித்தல்;. வேண்டுமென்றே இதனை செய்யாமல் இருத்தல் அல்லது மேற்படி பதிவேட்டில் பெயர்களைச் சேர்ப்பதனை தடைசெய்தல் என்பவற்றிற்கு ஏற்புடைய தண்டனைகளை உட்சேர்த்தல்.

எ)சட்டத்தின் 20(3)வது வாசகத்தைத் திருத்தி மேல் நீதிமன்றத்திற்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், காணாமற்போன ஆட்;கள் பற்றிய அலுவலகத்திற்கும் மனுக்களை அனுப்புவதற்கு வாய்ப்பளித்தல்.

ஏ)சட்டத்தின் 6வது வாசகத்தைத் திருத்தி கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள, பிரத்தியேக நியாயாதிக்க அதிகாரத்தை நீக்கி, குற்றவியல் குற்றம் புரியப்பட்ட பிரதேசத்திற்குரிய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்குதல்.

விசாரணைகளும் வழக்குத் தொடருதலும்

ஐ)வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு ஏற்புடைய வழக்குத் தொடுத்தல்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கும் வழக்குகளை பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் வழங்குதல்.

ஒ)சகலவிதமான நியாயமற்ற கைதுகளையும், சித்திரவதைகளுக்கு உட்படுத்துதலையும் கைது செய்யப்பட்டிருக்கும்போது நிகழும் உயிரிழப்புக்களின்போதும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஓ)ஏதாவது ஓர் வழக்கின் குற்றம் சுமத்தப்பட்டவர் அல்லது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டவர், அரச உத்தியோகத்தராகவோ ஆயதப்படைகளின் அல்லது பொலிஸ் படை உறுப்பினராகவோ இருப்பின் குறிப்பிட்ட வழக்கு விசாரித்து முடியும் வரை, அந்நபரை அவரது சேவையிலிருந்து இடை நிறுத்துதல். ஆயுதப்படை அல்லது பொலிஸ் படை உறுப்பினரை சேவை நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்தல், பதவி உயர்வு வழங்குதல் அல்லது வேறு பதவி வழங்குதல் என்பன அவரது வழக்கு விசாரணை முடிவு செய்யப்படும் வரை மேற்கொள்ளப்படக் கூடாது.

ஓள) மனித எழும்புக்கூடுகள் சரியாக அடையாளம் காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, தற்போது மரண விசாரணை பற்றிய சட்ட அமைப்புக்களை திருத்த எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை துரிதப்படுத்தவும், தேடுதல் மீளப்பெறுதல், அடையாளம் காணுதல் தொடர்பான முயற்சிகளுக்கு பொறுப்பான நிறுவனங்களுக்கிடையில் இணைப்பாக்கத்தை ஏற்படுத்துதலும்

க)சட்டத்தை அமுலாக்கும் உத்தியோகத்தர்களுக்கு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு, நீதி மன்றத்திற்கு காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும், தண்டனைகளுக்கும் போதிய பௌதீக வளங்களும், மனித வளங்களும் வழங்கப்படவேண்டும்.

ங)எலும்புக் கூடுகள் மற்றும் மனித அவையவையங்கள் பற்றி அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பதற்கான தேவைகளை ஏற்படுத்துதல்
தடுப்பு

ச)ஆட்கள் கைது செய்யப்படும் போதும் தடுத்து வைக்கப்படும் போதும் உரிய செயல் முறைகளைப் பேணுதல்.

ங)தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் தடுத்து வைக்கப்படும் மத்திய நிலையங்களின் முழுமையான பட்டியல் ஒன்று பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

ஞ)நீதிமன்ற மீளாய்வு இன்றி சந்தேக நபர்களும் குற்றம் சுமத்தப்பட்டவர்களும் நீண்ட காலமாக தடுத்து வைக்கக் கூடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை நீக்குதல் அல்லது சீர் திருத்துதல்

நினைவுகூறுவதற்கான அவசரமான பரிந்துரைகள்

48.காணாமற் போனோர் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின்போது காணாமற்போன தமது அன்பார்ந்தவர்களைப் பற்றிய ஞாபகத்தோடு நீண்டகாலமாக தனிமையில் வேதனையுடன் இருந்த குடும்பங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு பல தசாப்தங்களாக அனைத்து இனங்களுக்கும் உரித்தானவர்கள் காணாமல் போயுள்ளமையை ஏற்றுக்கொள்வது இலங்கை மக்களின் தேவையாகுமெனவும் அது தகுதியானது எனவும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். இதற்கமைய

ண) காணாமற் போனோருக்கான நினைவு தினம் ஒன்றைக் குறிப்பிடுதல்.

த)பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைக்கப்படடிருந்த நினைவுச் சின்னமான ‘அஹிம்சக்க ஆராமய’ என்ற ஞாபகார்த்த மண்டபத்தை மீள ஸ்தாபித்தல்.

ப)அகழ்வு நடவடிக்கைகளின் பின்னர் கூட்டுப்புதைகுழிகள் ஞாபகார்த்த அமைவிடங்களாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button