...
செய்திகள்

காலிமாநகர்- அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் ..

தென்னிலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட வேலவனே
தெளிவான வழிகாட்டி எமக்கருள வந்திடப்பா
தீயபகை, கொடுமையின்றி நம்வாழ்வு நிலை பெறவே
தயங்காது அருளிடவே விரைந்து நீ வந்திடப்பா
அலை மோதும் கடல் அருகிருந்து அருளுகின்ற வேலவனே
எம்மருகே நீயிருந்து எமக்கருள வந்திடப்பா
அணைத்தருளி நன்மை செய்து ஆறுதலை அளித்திடவே
சிவனாரின் இளமகனே விரைந்து நீ வந்திடப்பா
பெருங் கடலின் ஓசையினை அருகு கொண்ட வேலவனே
வரும் நோய்கள் போக்கி எமக்கருள வந்திடப்பா
ஏற்றமிகு பெருவாழ்வு எமைவந்து சேர்ந்திடவே
ஆற்றலுடன் அருளிடவே விரைந்து நீ வந்திடப்பா
அழகு மயில் ஏறிவந்து அருள் பொழியும் வேலவனே
அரவணைத்துக் காத்து எமக்கருள வந்திடப்பா
அச்சமில்லா நிம்மதியை நாம் பெற்று வாழ்ந்திடவே
அருகில் வந்து அரவணைக்க விரைந்து நீ வந்திடப்பா
முத்தமிழின் காவலனாய் பெருமை பெற்ற வேலவனே
எத்திக்கும் தமிழர் நிலை உயர்ந்திடவே வந்திடப்பா
உரிமைகள் அனைத்தையும் நாம் பெற்று உயர்ந்திடவே
ஏற்ற வழியமைத்திடவே விரைந்து நீ வந்திடப்பா
காலிநகர்தனிலே இருந்தருளும் கதிர்வேலவனே
கலக்கமில்லா உளவுறுதி எமக்களிக்க வந்திடப்பா
இந்நாட்டில் எல்லோரும் இணைந்து நலம் பெற்றிடவே
உறுதுணையாயிருந்தெமக்கு வழிகாட்ட விரைந்து நீ வந்திடப்பா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen