செய்திகள்

காலி மீனாட்சி சுந்தரேஸ்வரம் கோயில்..

தென்னிலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட சிவனே
திக்கெல்லாம் உன்னருளைப் பரப்பிடவே வருவாய்
கல்லான மனங்களையும் கரைய வைக்கும் கோவே
காலி மாநகரிருந்து கருணை செய்வாய் ஐயா 
அலைகடலின் கரையிருந்து அருள் வழங்கும் சிவனே
அருளளித்து, அரவணைத்துக் காத்திடவே வருவாய்
மலைமகளின் அருளுடனே வாழ்வளிக்கும் கோவே
மலரடியைப் போற்றுகின்றோம் வந்திடுவாய் ஐயா
சுடலையிலே ஆடுகின்றன திருவருளே சிவனே
சித்தமெல்லாம் சீரடையும் பெருமையை நீ தருவாய்
உறுகுணையில் குடியிருக்கும் உத்தமனே கோவே
உறுதிதந்து வாழ்வளிக்க வந்திடுவாய் ஐயா 
பாண்டியனின் இலச்சினையைக் கொண்ட எங்கள் சிவனே
பாசமுடன் உன்னடியைப் பணியுமெம்மைக் காப்பாய்
வானவர்கள் போற்றுகின்ற மாசறுக்கும் கோவே
வந்தணைத்து அருளிடவே விரைந்திடுவாய் ஐயா 
மீனாட்சி சுந்தரரெனப் பெயர் கொண்ட சிவனே
மீட்சி பெற்றுநாம் வாழ நின்னருளைத் தருவாய்
கதிர்காமக் கந்தனைத் தந்திட்ட கோவே
காவல் செய்து எமக்குத் துணை இருந்திடுவாய் ஐயா. 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button