ஆன்மீகம்

கிளிநொச்சி- அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்..

தமிழ் மணக்கும் திருநகரில் கோயில் கொண்ட கந்தா
தலைநிமிர்ந்து நேர்மையுடன் வாழவழி செய்வாய்
சூரனை அடக்கியருள் தந்தாய் நீ அன்று
சூழும் பகை, கொடுமைகளை தடுத்திடுவாய் இன்று

கிளிநொச்சி பெருநகரில் வீற்றிருக்கும் கந்தா
கிலியற்று நிம்மதியுடன் வாழவழி செய்வாய்
ஔவைக்கு தமிழ் சொன்னாய் நீ அன்று
உள்ளத்தால் நாமுயர வழிகாட்டு இன்று

வளங்கொண்ட தமிழ் நிலத்தில் கோயில் கொண்ட கந்தா
பகையற்று நம்மவர்கள் வாழவழி செய்வாய்
தந்தைக்கு உபதேசம் செய்தாய் நீ அன்று
தரணியிலே தமிழ் ஒலிக்க வழிகாட்டு இன்று

திருவேலை மூலவராய்க் கொண்டமர்ந்த கந்தா
திடங்கொண்டு நாம் வாழ வழி செய்வாய்
வேடுவன் திருமகளை மணந்தாய் நீ அன்று
வேண்டும் வரம் தந்தெமக்கு வழிகாட்டு இன்று

ஆவணியில், பூரணையில் தீர்த்தம் காணும் கந்தா
ஆறுதலாய் நாம் வாழ உரியவழி செய்வாய்
திருப்புகழில் பாடல் பெற்றாய் நீ அன்று
திருப்பாதம் பணியுமெமக் கருளிடுவாய் இன்று

கிளிநொச்சி குளத்தினிலே தீர்த்தமாடும் கந்தா
கூடிவரும் கொடியபகை, கொடுமைகளை அழித்து வழி செய்வாய்
தமிழ்க் கடவுள் என்று பெயர் கொண்டாய் நீ அன்று
தரணியிலே தமிழர் நலன்காக்க புறப்படுவாய் இன்று.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button