செய்திகள்

கிளிநொச்சி- இரணைமடு அருள்மிகு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் திருக்கோயில் 

வளங் கொழிக்கும் கிளிநொச்சி பெருநிலத்தில் கோயில் கொண்ட தாயே 
வாழ்வினிலே நல்லமைதி தரவேண்டும் நீயே
என்றுமுடனிருந்து வழிநடத்தும் தாயே கனகாம்பிகை அம்மா 
தவறில்லா நேர்வழியில் நடக்க எமக்கருள் செய்வாய் நீயே 
இரணைமடுக் குளத்தருகே எழுந்துறையும் தாயே 
இன்பம் நிறை வாழ்வுக்கு வழி தரவேண்டும் நீயே 
இரக்க மனங் கொண்டவளே தாயே கனகாம்பிகை அம்மா
ஏற்றமிகு உயர்வழியில் நடக்க எமக்கருள் செய்வாய் நீயே 
கிளிநொச்சி அன்னையெனப் பெயர் கொண்ட தாயே 
குறைவில்லா நிறை வாழ்வைத் தர வேண்டும் நீயே
உடனிருந்து எங்களை உயிர்ப்பிக்கும் தாயே கனகாம்பிகை அம்மா 
உற்ற துணையாயிருந்து  சீராக நடக்க எமக்கருள் செய்வாய் நீயே 
வலது திருக்கரத்திலே அழகுமிகு கிளியினை ஏந்திநிற்கும் தாயே 
வளம் பொங்கும் இயல்பு நிலை தரவேண்டும் நீயே 
உள்ளத்தில் உறைந்திருந்து ஆளுகின்ற தாயே கனகாம்பிகை அம்மா 
சீர்பெருக வாழ்வதற்கு ஏற்றவழி நடக்க எமக்கருள் செய்வாய் நீயே 
அன்னை பராசக்தியின் மறுவுருவாய்த் தோன்றுகின்ற தாயே 
மாசில்லா மனத்தினராய் வாழ வழி தரவேண்டும் நீயே 
கொண்ட கொள்கை பிறழாது வழி நடக்க ஆற்றல் தரும் தாயே கனகாம்பிகை அம்மா 
தொல்லை தரும் நோய்களின்றி நடக்க எமக்கருள் செய்வாய் நீயே 
இரணைமடு குளத்தினிலே தீர்த்தமாடும் தாயே 
இறுதிவரை உடனிருந்து துணை தரவேண்டும் நீயே 
அன்புடனே அரவணைத்து எமையாளும் தாயே கனகாம்பிகை அம்மா 
தலை தாழா நேர்வழியில் நடக்க எமக்கருள் செய்வாய் நீயே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button