கிளிநொச்சி – புளியம்பொக்கணை அருள்மிகு நாகதம்பிரான் திருக்கோயில்

வடமாகாணம் – கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி – புளியம்பொக்கணை அருள்மிகு நாகதம்பிரான் திருக்கோயில்
சிவனாரின் ஆரமாய்த் திகழ்கின்ற தம்பிரானே
சீறிவரும் கொடுமைகளைச் சிதைத்திடவே வாருமைய்யா
சிந்தையிலே நிம்மதியைச் சீராக இருத்திவிடு
புளியம் பொக்கணை கோயில் கொண்ட நாகதம்பிரானே
சிவனாரின் திருக்கோயில் அருகினிலே கோயிலுறை தம்பிரானே
நாகலிங்கேஸ்வரப் பெருமானின் கருணையையும் எமக்காக்க வாருமைய்யா
நாகேஸ்வரி அம்பிகையின் ஆசியையும் சேர்த்துவிடு
புளியம் பொக்கணை கோயில் கொண்ட நாகதம்பிரானே
வளங்கொண்ட மருதநிலச் சூழலிலே வீற்றிருக்கும் தம்பிரானே
வாழ்வினிலே சறுக்காத நிலை தரவே வாருமைய்யா
வருந்துன்பம் தடுத்துவிடு உடனிருந்து காத்துவிடு
புளியம் பொக்கணை கோயில் கொண்ட நாகதம்பிரானே
இயற்கை எழில் சூழ்ந்த இடமமர்ந்த தம்பிரானே
இன்பம் நிறை வாழ்வினையே எமக்களிக்க வாருமைய்யா
இப்புவியில் நிம்மதியாய் இருக்க அருளிவிடு
புளியம் பொக்கணை கோயில் கொண்ட நாகதம்பிரானே
காலமெல்லாம் துணையிருந்து காத்தருளும் தம்பிரானே
கவலையில்லா வாழ்வினையே தந்தருள வாருமைய்யா
கலக்கமின்றி வாழ்வதற்கு காப்பை நீ தந்துவிடு
புளியம் பொக்கணை கோயில் கொண்ட நாகதம்பிரானே
நாடிவந்து பொங்கலிடும் அடியவர்க்கு அருளுகின்ற தம்பிரானே
நொந்து மனம் வாடாமல் எமைக்காக்க வாருமைய்யா
நேர்மையாய் வாழ்வதற்கு ஏற்றவழி காட்டிவிடு
புளியம் பொக்கணை கோயில் கொண்ட நாகதம்பிரானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.