மலையகம்

குழாய் குடிநீர் சுத்தமானதாக இல்லை

“நுவரெலியா மாநகர சபையால் வழங்கப்படும் குழாய் குடிநீர், நூறு சதவீதம் சுத்தமானதாக இல்லை” என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (25) காலை நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“கடந்த பல மாதங்களாக, நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் வாழும் பொதுமக்கள் அசுத்தமான நீரையே பருகி வருகின்றனர்.  நுவரெலியா மாநகர சபையும், நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து, நுவரெலியா வாழ் பொதுமக்களுக்கும் இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“அசுத்தமான நீரை தொடர்ந்து பருகுவதால் நோய்கள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, மனிதாபிமானத்தோடு மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், “நுவரெலியா – வெலிமடை வீதியில், காமினி தேசிய கல்லூரிக்கு அருகாமையில், கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த ஒருவரின் காணியை, நுவரெலியா மாநகர சபை சுவீகரித்து, அந்தக் காணியில் குடியிருந்தவருக்கு கொள்கலன் (கென்டர்) அமைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

“ஆனால்,
சம்பந்தபட்டவருக்கு அந்த இடத்தை,  வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வழங்காமல் இருப்பது கலலைக்குரிய விடயமாகும். இதேவேளை, தர்மபால சந்திக்கு அருகில், கொள்கலன் (கென்டர்) மூலம் வியாபாரம் செய்து வந்தவருக்கு, நுவரெலியா – கிரகரி வாவிக்கு அருகில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் விடுதிக்கு அண்மையில் வியாபாரம் நடாத்துவதற்கு காணி வழங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், பாதிக்கபட்டவருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன், ஜி.எம்.எம். பியசிறி, எஸ்.பி.ரத்னாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button