கூட்டு உடன்படிக்கை அடுத்தக்கட்ட சந்திப்பு ?
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி பெருந்தோட்டப் பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் இன்று பல இடங்களில் போராட்டங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கூட்டு உடன்படிக்கை தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான அடுத்தகட்ட சந்திப்பு அடுத்தவாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மூன்று கட்டங்களாக இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த போதும், அவை இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்தன.
குறிப்பாக முதலாளிமார் சம்மேளனம் அடிப்படை நாளாந்த வேதனமாக 600 ரூபாவை வழங்க முன்வந்திருப்பதாகவும், எனினும் தொழிற்சங்கங்கள் அடிப்படை நாளாந்த வேதனமாக 962 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புபடாத தொழிற்சங்கமான தமிழர் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் கடந்த தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர்.
இதன்போது இந்த வாரத்துக்குள் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சரியான வேதன அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், தாம் இந்த விடயத்தில் தலையீட்டை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார் என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் கூறி இருந்தார்.
இந்தநிலையில் நேற்றையதினம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தொழில் துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரவுடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் சந்திப்பு நடத்தி இருந்தார்.
மேலும், கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் முதலாளிமார் சம்மேளனம் உரிய வேதன அதிகரிப்பை வழங்காத பட்சத்தில், ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.