...
செய்திகள்

‘கூட்டு ஒப்பந்தமே பாதுகாப்புகவசம்’ அக்கரபத்தனையில் தொழிலாளர்களிடம் சக்திவேல்தெரிவிப்பு

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டக் கம்பனிகளின் கெடுபிடிகளைக் கண்டித்தும், தமக்கான தொழில் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுமே அவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் விசேட பிரதிநிதியாக சக்திவேல் போராட்டக்களம் புகுந்து, தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் எட்டப்பட்டு, அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. எனினும், இந்த சம்பள உயர்வை வழங்குவதற்கு அக்கரபத்தனை பிளான்டேசன் பின்வாங்குகின்றது.

கொழுந்தே இல்லாத தேயிலை மலையில் 20 கிலோ பறிக்குமாறு தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அரை நாள் பெயரே திட்டமிட்ட அடிப்படையில் வழங்கப்படுகின்றது. சூழ்ச்சிகரமான திட்டம்மூலம் மேலதிக கொழுந்துக்கு 40 ரூபா வழங்கப்படுகின்றது. இந்த அணுகுமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எவ்வித தொழில் சுமையும் அதிகரிக்காத வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்.

இரண்டொரு நாளில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதுவரை எமது போராட்டம் தொடருமென எச்சரிக்கை விடுகின்றோம்.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தின் அருமையை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். அந்த ஒப்பந்தம்தான் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கவசம். ஏனைய தொழிற்சங்கங்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, அந்த ஒப்பந்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. கூட்டு ஒப்பந்தம் அமுலுக்கு வந்தாலும் ஆயிரம் ரூபா சம்பளத்தில் மாற்றம் எதுவும் வராது, அது தொழிலாளர்களுக்கு உரிய வகையில் கிடைப்பதை உறுதிசெய்வோம்.” – என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen