மலையகம்

கொட்டகலையில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம்

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீக்கப்பட்ட “தொண்டமான்” என்ற பெயரை மீண்டும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை வழியுறுத்தி கொட்டகலை நகரில் ஒரு மணி நேரம் கடையடைப்பு உள்ளிட்ட மாபெரும் எதிர்ப்பு பேரணியூடான போராட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டகலை நகரில் முன்னெடுத்தது.

இன்று காலை 10 மணியளவில் இந்த எதிர்ப்பு பேரணியூடான போராட்டம் கொட்டகலை பிரதேச சபை அமைந்துள்ள வளாகப்பகுதியிலிருந்து ஆரம்பமாகி சுமார் 2 கிலோ மீற்றர் தூரமாக பேரணி நடத்தப்பட்டு கொட்டகலை புகையிரத கடவை சந்தி வரை சென்று மீண்டும் கொட்டகலை விநாயகர் ஆலய முன்றலில் ஆர்பாட்டத்துடன் நிறைவு பெற்றது.இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஆதரிக்கும் சுமார் 200ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைக்காக வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் கோஷங்களையும் எழுப்பி ஈடுப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், பிலிப்குமார் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்கியமாக ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நீக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் அந்த நிலையத்திற்கு பொறுப்பான அமைச்சு உள்வாங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் தலையீடு செய்து தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வழியுறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு சில சட்ட ஒழுங்கு விதிகளை கொண்ட வகையில் முன்னெடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த நீதிமன்ற உத்தரவு திம்புள்ள பத்தனை பொலிஸாரால் ஹட்டன் நீதிமன்றத்தில் பெறப்பட்டிருந்தமையும், இதனூடாக பிரதான வீதிகளை மறைத்தும், கொட்டகலை நகரில் வர்த்தகத்தை பாதிக்காத வகையிலும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத நிலையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button