செய்திகள்

“கொரோனா” அச்சத்திலிருந்து உலகம் விடுபட மலரும் புத்தாண்டில் மனதில் உறுதி பூணுவோம்! -பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் வாழ்த்துச் செய்தி..

     ( மஸ்கெலியா நிருபர் )
 

மக்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து புத்தாண்டை வரவேற்ற கலாசாரம் மாறி, இம்முறை கைகழுவி, கைகூப்பி வரவேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கொரோனாவின் ஓராண்டு கால அச்சுறுத்தல் நீங்கி மலரும் புத்தாண்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
  
அவர் மேலும் தமது செய்தியில்,
   நாட்டு மக்கள் யுத்தம், சுனாமி முதலான எத்தனையோ சவால்களுக்கு முகங் கொடுத்து வந்துள்ள போதிலும், “கொரோனா” போன்ற கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். “வருமுன் காத்தல், வந்தபின் சிகிச்சை” என்ற சுகாதார நடைமுறைக்கு ஏற்ப முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டும், சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் வருகின்றது. இந்நிலையில் தனிமனித சுய கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே எமது சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
   
அதேநேரம், மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சம்பள உயர்வுக்கு தகுந்த முறையில் தீர்வு காணப்பட வேண்டும். மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
   
மலையக மக்கள் காலங் காலமாக எதிர்நோக்கிவரும் காணி, குடியிருப்பு பிரச்சினைகள் தீர்ந்து, அவர்களின் வாழ்வில் சுபிட்சம் தோன்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக இருந்து எமது பிரச்சினைகளை வென்றெடுக்க மனதில் உறுதி பூணுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button