செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி: பொது கருத்துக்கணிப்பு அறிக்கை…

கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து, பல நாடுகளில், கடந்த வாரங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இலங்கைக்கும் நாளை (27) கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டு, தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின், நடத்தை ஆராய்ச்சிப் பிரிவால் நடத்தப்பட்ட, பொதுக் கருத்து ஆய்வின், ஆரம்ப அறிக்கை வெளியாகியிருந்தது.

அந்த அறிக்கையின் பிரகாரம், 895 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 55 சதவீத ஆண்களிடமும் 81 சதவீத பெரும்பான்மையினத்தவரிடமும், 63 சதவீதத்தைச் சேர்ந்த மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமும், 73 சதவீதமான பட்டதாரி அல்லது பட்டதாரிகளாவதற்கான கல்வியைத் தொடர்வோரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கருத்துக்கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்களில், 80 சதவீதமானோர் தொழில் புரிபவர்களாகவும் 27 சதவீதமானோர், சுகாதார சேவைப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் 51 சதவீதமானோர், 100,000 ரூபாய்க்கும் மேற்பட்ட வருமானத்தைப் பெறுபவர்களாகவும் உள்ளனர்.

அத்துடன், இவ்வாறு கருத்துக்கணிப்புக்கு உள்வாங்கப்பட்டவர்களில், 99.3 சதவீதமானவர்கள், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாதவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்.

இந்தக் கருத்துக்கணிப்பின் பிரகாரம், 47 சதவீதமானோர், தங்களுக்கு தொற்று ஏற்படும் என்பதை உணர்ந்துள்ளனர். 27.4 சதவீதமானோர், தங்களுக்கு சிலவேளைகளில் தொற்று ஏற்படலாம் என்றும் 14 சதவீதமானோர், தங்களுக்கு கட்டாயமாக தொற்று ஏற்படலாம் என்பதை உணர்ந்துள்ளனர்.

அத்துடன், 53 சதவீதமானோர், தங்களுக்கு கடுமையான நோய்த்தொற்று ஏற்பட சராசரியான வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 54 சதவீதமானோர்,  தங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் விருப்பத்தில் உள்ளனர். 38 சதவீதமானோர், இதைப் போட்டுக்கொள்வதா இல்லையான எனும் குழப்பத்தில் உள்ளனர். 8 சதவீதமானோர், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பாலின அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், 34 சதவீதமான ஆண்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் குழப்பத்திலேயே உள்ளனர். 43 சதவீதமான பெண்களும், இந்தக் குழப்பத்திலேயே உள்ளனர்.

55 சதவீத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் எண்ணத்திலேயே உள்ளனர். அதேபோன்று. 50 சதவித தமிழர்களும், 59 சதவீத முஸ்லிம்களும், 56 சதவீத பரங்கியர்களும் 68 சதவீத மற்றைய இனத்தைச் சேர்ந்தவர்களும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் எண்ணத்திலேயே உள்ளனர்.

அத்துடன், 57.4 சதவீதமான சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளனர். எனினும், 37 சதவீதமானவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதா இல்லையான என்ற குழப்பத்தில் உள்ளனர் என்று, இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமானத்தின் அடிப்படையில் பார்க்கும்போது. 25,000 ரூபாய்க்கும் அதிமான சம்பளத்தைப் பெறுவோரில் 30 சதவீதமானோர், தடுப்பூசியைப் பொற்றுக்கொள்வதில், குறைந்த அக்கறையைச் செலுத்தி வருகின்றனர். அத்துடன், 100,000 ரூபாய்க்கும் அதிகளவான வருமானத்தைப் பெறுவோரில் 59 சதவீதமானோர். தடுப்பூசியைப்  போட்டுக்கொள்ளுவதில் அதிக விருப்பத்தில் உள்ளனர்.

இவையனைத்துக்கும் மேலாக, பெரும்பாலான பொதுமக்கள், தாங்கள் போட்டுக்கொள்ள விரும்பும் தடுப்பூசியின் தரம், பக்க விளைவுகள், ஒவ்வாமை, பாதுகாக்கும் காலத்தின் அளவு குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

நன்றி தமிழ் மிரர்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com