விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நேற்று (24) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 8 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 12 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறது.இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 6 வெற்றிகளை ஈட்டியுள்ளது.

இப் போட்டியில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் அண்ட்ரே ரசல் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் போதிலும் அவை இறுதியில் பலனற்றுப் போயின.சுமாரான மொத்த எண்ணிக்கை பெறப்பட்ட போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 9 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.ஆரம்ப வீரர்களில் ஒருவரான ஷுப்மான் கில் (7) ஆட்டமிழந்ததும் துடுப்பாட்ட வரிசையில் தன்னை உயர்த்திக்கொண்ட அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ரிதிமான் சஹாவுடன் 2ஆவது விக்கெட்டில் 56 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.இதில் ரிதிமான் சஹாவின் பங்களிப்பு 25 ஓட்டங்களாகும்.

தொடர்ந்து பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.மில்லர் ஆட்டமிழந்த சற்று நேரத்தில் ஹார்திக் பாண்டியா 67 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றதுடன் ராஷித் கான் ஓட்டம் பெறாமல் வெளியேறினார்.

19ஆவது ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றிருந்த குஐராத் டைட்டன்ஸ், மொத்த எண்ணிக்கையை 170 ஓட்டங்கள்வரை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கடைசி ஓவரை வீசிய அண்ட்றே ரசல், முதல் 2 பந்துகளில் அபினவ் மனோஹர் (2), லொக்கி பேர்குசன் (0) ஆகியோரையும் கடைசி 2 பந்துகளில் ராகுல் தெவாட்டியா (17), யாஷ் தயாள் (0) ஆகியோரையும் ஆட்டமிழக்கச் செய்து கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு தற்காலிக நம்பிக்கையை ஊட்டினார்.பந்துவீச்சில் அண்ட்றே ஒரு ஓவரில் 5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டிம் சௌதீ 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று தோலல்வியைத் தழுவியது.

Related Articles

Back to top button