கொழும்பு- அருள்மிகு மயூராபதி பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

கொழும்பு மாநகரிருந்து திருவருளைத் தருபவளே
நாற்றிசையும் உன் கருணை நீக்கமற நிறைந்திடவே
பார்காக்கும் தாயவளே தாள்பணிந்து தொழுகின்றோம்
மயூராபதி கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே துணையிருப்பாய்
மேற்கிலங்கை எழுந்தருளி மேன்மைகளைத் தருபவளே
மேதினியில் உன்னருளால் நன்மையென்றும் நிறைந்திடவே
தரணிதனைத் தாங்குகின்ற தாயவளே தாள்பணிந்து தொழுகின்றோம்
மயூராபதி கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே துணையிருப்பாய்
அழகுமிகு திருக்கோயில் அமர்ந்து நலம் தருபவளே
அச்சமில்லா நிம்மதியே நிரந்தரமாய் நிறைந்திடவே
அருள் பொழியும் தாயவளே தாள்பணிந்து தொழுகின்றோம்
மயூராபதி கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே துணையிருப்பாய்
ஞாலமெல்லாம் நலம் பெறவே நல்வளங்கள் தருபவளே
ஞானம் நிறை நல்லறிவு புவியெங்கும் நிறைந்திடவே தாயாக இருந்து எம்மை வழிநடத்தும் தாயவளே தாள்பணிந்து தொழுகின்றோம்
மயூராபதி கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே துணையிருப்பாய்
அல்லல் களைந் தெமக்கு ஆறுதலைத் தருபவளே
அன்பு நிறை அமைதி நிலை எங்கும் நிறைந்திடவே
அருளளித்து அரவணைக்கும் தாயவளே தாள்பணிந்து தொழுகின்றோம்
மயூராபதி கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே துணையிருப்பாய்
கொடும் பகைகள், தீவினைகள் களைந்து நலம் தருபவளே
கொடுமையில்லா நன்நிலைமை எங்கும் நிறைந்திடவே கருணைமிகு தாயவளே தாள்பணிந்து தொழுகின்றோம்
மயூராபதி கோயில் கொண்ட பத்திரகாளி அம்மாவே துணையிருப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்துமாமன்றம்.