...
செய்திகள்

கொவிட் அபாயம் !அச்சுறுத்தலில் 8 மாவட்டங்கள்

வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் போது , பிரதான வைரஸிலிருந்து உப பிறழ்வுகளை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு உருவாகும் பிறழ்வுகள் பிரதான வைரஸை விடவும் அபாயம் மிக்கதாகக் காணப்படும். 

எனவே சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி எமது பாதுகாப்பை நாமே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது கொவிட் பரவல் அதிகரித்துள்ளமையின் காரணமாகவே இம்மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கல் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் ஒன்று கூடல்கள் அதிகரித்துள்ளமையே கொவிட் தொற்று மீண்டும் அதிகரிக்கக் காரணமாகும். கிராம பகுதிகளிலேயே இவ்வாறு அதிகரிப்பு இனங்காணப்பட்டுள்ளது. 

இதே நிலைமை தொடர்ந்தால் மீண்டும் முடக்கத்திற்கே செல்ல வேண்டியேற்படும். நாட்டில் 16 வயதுக்கு மேற்பட்டோர் சனத்தொகை 16.2 மில்லியனாகும். இவர்களில் 15.8 மில்லியன் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 98 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 84 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டாலும் சுகாதார விதிமுறைகளை முறையாகக் பின்பற்றாவிட்டால் , தடுப்பூசி மூலமான முழுப்பயனையும் பெற முடியாது.

தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. 

எனவே தான் இந்த மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் புதிய வைரஸ் பிறழ்வுகள் உருவாகினால் அவை ஆரம்பத்தில் இனங்காணப்பட்ட பிறழ்வுகளை விட அபாயம் மிக்கவையாகவே காணப்படும். வைரஸ் காரணமாக தொற்று நிலைமை ஏற்படும் போது புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறுவது இயல்பாகும். 

அவற்றை யாராலும் தவிர்க்க முடியாது. அவை மருத்துவ சேவைக்கு அப்பாற்பட்டவையாகும். எனவே இவற்றிலிருந்து ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அத்தியாவசியமானதாகும் என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen