செய்திகள்

கொவிட் உடலங்களை அடக்கம் செய்வதில் சிக்கல் இல்லை: இலங்கை மருத்துவ சபை தெரிவிப்பு.

கொவிட்- 19 வைரஸ் ஒரு உயிரணுக்குள் மட்டுமே செழிக்க முடியும். எந்தவொரு காலத்திற்கும் இது ஒரு இறந்த உடலுக்குள் தொற்றுநோயாக இருக்க வாய்ப்பில்லை. எனவே இலங்கையில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தேவைப்படின் அடக்கம் செய்யலாம்.

இதனால் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது என்பதை நிபுணத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டு மக்களுக்கும் விரைவாக தெளிவுப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் மரணங்கள் இலங்கையில் தகனம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிராக கடும் எதிர்ப்பு நடவடிக்கைளும் விமர்சனங்களும் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு நிலையில் மேற்கண்டவாறான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை மருத்துவ சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஆனால் அவ்வாறான சடலங்களை இலங்கையில் அடக்கம் செய்வதால் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது என்பதை நாம் மேற்கொண்ட நிபுணத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளோம்.

இதனடிப்படையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தேவைப்படின் நாட்டில் அடக்கம் செய்வதில் எவ்விதமான சிக்கலும் இல்லை என்பதே இலங்கை மருத்துவ சபையின் நிலைப்பாடாகும். இந்த அறிவிப்பை சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு உடன் அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று நாட்டு மக்களுக்கு இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாயக்கிழமை முழு அளவில் விளக்கமளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனுமதிக்கான 7 காரணிகளையும் முன்வைத்துள்ளது. அதனடிப்படையில் , கொவிட் – 19 தொற்று சுவாச பாதை வழியாக மட்டுமே ஏற்படுகிறது. இரைப்பை-குடல் உட்பட வேறு எந்த வழிகளிலும் இந்த வைரஸ்தொற்று ஏற்படாது.

மேலும் இந்த வைரஸ் ஒரு உயிரணுக்குள் மட்டுமே செழிக்க முடியும். எனவே, எந்தவொரு காலத்திற்கும் இது ஒரு இறந்த உடலுக்குள் தொற்றுநோயாக இருக்க வாய்ப்பில்லை.
இறப்பிற்கு காரணம் கொவிட்-19 வைரஸ் என்பதை பிரேத பரிசோதனையில் பி.சி.ஆர் உறுதிப்படுத்தினாலும் , இறந்த உடல் ஒரு தொற்று என்று அர்த்தமல்ல.

அத்துடன் கொவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வெளியேற்றங்கள் மற்றும் சுரப்புகளைக் கொண்ட கழிவுநீர் மூலம் நீர் விநியோகத்தை மாசுபடுத்துவது புதைக்கப்பட்ட சடலங்களிலிருந்து மாசுபடுவதை விட மோசமானதாகும்.

நிலத்தடி நீரிலிருந்து வைரஸ் துகள்கள் தனிமைப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், அவை தொற்றுநோயாக இருப்பதாக எந்த அறிக்கையும் இல்லை. இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சார்ஸ் – சி.ஓ.வி-1 போன்ற பழைய வைரஸ்களுடன் கூட இதுபோன்ற தொற்றுநோய்கள் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை, அவை மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

டென்மார்க்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏராளமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அடக்கம் செய்வதால் நீர்வளங்கள் மாசுபடுதல் ஏற்படவில்லை. மாறாக வேறு வெளியேற்றங்களே காரணம் என கண்டறிப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல கொலரா போன்ற கடுமையான நீரினால் பரவும் நோய்களில் கூட, சடலங்களை அடக்கம் செய்வது பாதிக்கப்பட்ட இறந்த உடல்களை அகற்றும் நடைமுறைகளில் ஒன்றாகவே அமைகின்றது.

எனவே இந்த அவதானிப்புகளின் அடிப்படையிலும் , தற்போது கிடைக்கக்கூடிய விஞ்ஞான ரீதியான தகவல்களை கவனத்தில் கொண்டும் இலங்கை மருத்துவ சபை , கொவிட் -19 வைரஸினால் இறந்த உடல்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதிக்கலாம் முடிவிற்கு வந்துள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : வீரகேசரி

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com