செய்திகள்

கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு..!

நாட்டின் பல பகுதிகளிலும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாளொன்றில் வழங்கப்பட்ட அதிகளவான தடுப்பூசி நேற்று வழங்கப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 763 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 572 சைனோபார்ம் தடுப்பூசி முதல் டோசும், 35 ஆயிரத்து 410 இரண்டாவது டோசும் அடங்குகின்றன. பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 7 ஆயிரத்து 416 பேருக்கு வழங்கப்பட்டது. நேற்றைய தினம் 3 ஆயிரத்து 365 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்றைய தினம் கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா திறந்த வெளி அரங்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என இராணுவ மருத்துவக் குழுக்கள் தெரிவித்துள்ளன. விஹாரமகாதேவி பூங்காவின் திறந்த அரங்கில் இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தை வதிவிடமாக கொண்டவர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது மின்கட்டண பட்டியல் அல்லது தொலைப்பேசி கட்டண பட்டியல் அல்லது கிராம சேவகரால் உறுதிசெய்யப்பட்ட வாக்காளர் டாப்பு பெயர் பட்டியலை சமர்ப்பித்து தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை இராணுவத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெஹெரஹரவிலுள்ள 1 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் தலைமையத்தின் கீழ் நிர்வகிக்கப்படுவதுடன், பத்தரமுல்லை ‘தியத உயன’ வில் இன்று நிறுவப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் திங்கட்கிழமை (19 ஜூலை) காலை 8.30 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு புதன்கிழமை (21) வரையில் முன்னெடுக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கை மக்கள் தொகையில், 30 வயதிற்கும் மேற்பட்டவர்களில் குறைந்தது 36 சதவீதம் பேருக்கு முதலாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button