அரசியல்செய்திகள்

சஜித்தின் வருகை சிறுபான்மையினருக்கான வெற்றி.

சஜித்தின் வருகை சிறுபான்மையினருக்கான வெற்றி அத்துடன், இந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகளே பிரதான பாத்திரத்தை வகிக்கும் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

இதனையடுத்து சஜித் பிரேமதாசவின் வருகையை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் ஆதரவாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு கொளுத்தி பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கண்டியில் இன்று மாலை ஆதரவாளர்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உரையாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு அக்கட்சியின் உயர்பீடம்ஆரம்பத்தில் வெளிப்படையாக விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை.

எனினும், நாட்டு மக்கள் சஜித்தையே கோருகின்றனர் என்றும், அவரையே வெற்றி வேட்பாளராக போட்டியிட வைக்கவேண்டும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட சிறுபான்மையினக் கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலைப்பாட்டிலிருந்து எம்மை பின்வாங்க வைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
 ஆனால், கொண்டகொள்கையில் நாம் உறுதியாக நின்றோம். இறுதியில் இன்று வெற்றியும் பெற்றுள்ளோம்.
சஜித் நிச்சயம் வருவார் என எமது மக்களுக்கு உறுதி வழங்கினோம். அவர் தற்போது வந்துவிட்டார். இதன்பின்னணியில் எமது பங்களிப்பும் அளப்பரியது.

அரசாங்கத்தில் பங்காளிகளாக அங்கம் வகித்தாலும் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பாவைகள் அல்ல நாம் என்பதை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளோம்.

எமக்கென தனித்துவமான கொள்கைகள், எண்ணங்கள் இருக்கின்றன. அவற்றை எந்த கொம்பனுக்காகவும் நாம் விட்டுக்கொடுக்கமாட்டோம்.

ஜனாதிபதி தேர்தலின்போதுகூட சிறுபான்மையினக் கட்சிகளே பிரதான பாத்திரத்தை வகிக்கபோகின்றன. 

ஆகவே எமது மக்களுக்காக எவற்றையெல்லாம் செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் வெற்றிகரமாக செய்துமுடிக்க முயற்சிப்போம்.
கடந்த நான்கரை வருடங்களில் உரிமை அரசியலுக்கும் முன்னுரிமை வழங்கி பல விடயங்களை வென்றெடுத்தோம்.

மேலும் பல திட்டங்களுக்கு அடித்தளமிட்டுள்ளோம்
 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அவற்றையும் செய்துமுடித்து மலையக அரசியலில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம். 

எனவே சஜித்தின் வருகை சிறுபான்மையினருக்கான வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

Related Articles

Back to top button