அரசியல்செய்திகள்

சஜித் தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட ரணில்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கியவர்கள், தற்போது அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்குவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ரணால பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காலையில் ஒரு வீட்டுத்திட்டத்தையும் மாலையில் ஒரு வீட்டுத் திட்டத்தையும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ திறந்து வைக்கிறார். எமது அரசாங்கத்தில் அதிகளவிலான மக்கள் சேவை செய்த ஒரு அமைச்சராக நாம் இவரைத்தான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அவரது தந்தைப் போல, 24 மணிநேரமும் மக்களுக்காகத்தான் இவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு நடைபெற்றது. இதன்போது, அவர்களது ஜனாதிபதி வேட்பாளர் கூறிய கருத்துக்களை நான் சிந்தித்துப் பார்த்தேன்.

இந்த நாட்டில் உள்ள அனைவரும் அச்சம் மற்றும் சந்தேகத்துடன் வாழும் சூழலை நாம் இல்லாதொழிப்போம் என்று அவர் விசேடமாக கூறியிருந்தார். இதனைக் கேட்டவுடன் சிரிப்பு வருகிறது.

இங்குள்ள அனைவரும் முதுகெலும்புடன்தான் இருந்து வருகிறோம். இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகத்தை நாம் தான் ஏற்படுத்தினோம். இதனையிட்டு விமர்சிக்கவும் கூச்சலிடவும் அனைவருக்கும் முடியும்.

ஆனால், இதனை கடந்த அரசாங்கத்தில் செய்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?. கூச்சலிட்டவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டிருப்பார். ஆனால், இன்று அந்தக் கலாசாரம் இல்லை. தற்போது எம்மை பலரும் விமர்ச்சிக்கிறார்கள்.

நாம் யாரையாவது வெள்ளை வேனில் கடத்தினோமா? அல்லது விமர்சித்தவர்களில் யாரேனும் உயிருடன் இல்லையா? உண்மையில், இதுதொடர்பாக நாம் கேள்விக் கூடக் கேட்கவில்லை.

வீதியில் வைத்து எமது உருவபொம்மைகளை எறிக்கிறார்கள். நாம் இதற்கு எதிர்ப்பினை வெளியிடாமல் விட்டவுடன், அடுத்த நாளும் எமது உருவ பொம்மையை எரிக்கிறார்கள். இதுதான் நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள சுதந்திரமாகும்.

எனவே, இதனை பின்னோக்கி கொண்டுசெல்ல நாம் அனுமதிக்கப்போவதில்லை. இதனை முன்னோக்கிக் கொண்டுசெல்வதே எமது இலக்காகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download