அரசியல்பதுளைமலையகம்

சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் அரவிந்தகுமார்

கூட்டு ஒப்பந்த முறையை ஒழித்து சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அந்த கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பாராளுமன்றத்தில் நேற்று (16) இடம்பெற்ற தொழில் அமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இக் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாளொன்றுக்கு 750 ரூபாவை பெறுவதாகவும் அதாவது 20 நாட்களுக்கு குறைவாக அவர்கள் வேலை செய்தால் மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாவையே பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

25 நாட்களுக்கும் மேலாக அவர்களால் வேலை செய்ய முடிந்தாலும் உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பதில்லை, அதனையும் மீறி அவர்கள் தொழில் செய்தால் அற்ப ஆயுளில் மரணிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே தோட்ட தொழிலாளர்கள் அற்ப ஆயுளில் மரணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதற்கு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பளம் பெறும் நிலைமையே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பளம் வழங்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களும் தொழிலாளர்கள் நன்மை கருதி அதிலிருந்து விலக வேண்டும் எனவும் அரவிந்தகுமார் கூறினார். ஆகவே இக் கூட்டு ஒப்பந்த முறை களையப்பட்டு, அதற்கு மாற்றிடாக சம்பள நிர்ணய சபையின் ஊடாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் பதுளை தொழில் காரியாலயத்தில் ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அதனை சகல வசதிகளுடன் மாற்றியமைக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

மேலும் தோட்ட தொழிலாளர்கள் தமது சேமலாப நிதியை பெற்றுக் கொள்ள இன்றும் தரகர்களை நாட வேண்டியுள்ளதாக கூறிய அவர்; இந்த நிலைமை முற்றாக மாற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை நேற்றைய (16) சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அரவிந்தகுமார் கடமை நிறைவேற்றும் அதிபர்களை நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்து அவர்களுக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

காரணம் தற்போது கடமை நிறைவேற்றும் அதிபர்கள் தற்போதைய நிலையில் இரண்டும் கெட்டான் நிலையில் செய்வதறியாது உள்ளதாகவும் கூறினார். இதனை உணர்ந்து கல்விசார் புதிய ஒரு தரத்தில் இவர்கள் பதவி உயர்வு பெறவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button