செய்திகள்

சர்வதேச பாராளுமன்ற தினத்தையொட்டி கௌரவ சபாநாயகரின் செய்தி…

இன்று சர்வதேச பாராளுமன்ற தினமாகும். ஆண்டுதோறும் ஜூன் 30 ஆம் திகதி சர்வதேச
பாராளுமன்ற தினத்தை கொண்டாடுவதற்கு ஏனைய நாடுகளை போன்று உலகின் பழைமையான
ஜனநாயக நாடான இலங்கை இவ்வருடமும் அபிமானத்துடன் ஒன்றிணைகின்றது.
அதுமட்டுமல்லாமல், 1931 இல் சர்வசன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற நாடாக உலக
வரலாற்றில் பதியப்பட்டுள்ள இலங்கை அந்த வாக்குரிமையை பயன்படுத்தி 1960 ஜூலை 21
ஆம் திகதி உலக அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க
அவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவந்து மற்றுமொரு முற்போக்கான வரலாற்றை பதிவு
செய்தது.

இலங்கை உள்ளிட்ட 179 நாடுகளை உள்ளடக்கிய 1889 இல் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து
பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து இவ்வருடமும் ஜூன் 30 ஆம்
திகதி சர்வதேச பாராளுமன்ற தினத்தை இலங்கை கொண்டாடுகிறது. தமது
உறுப்பினர்களிடையே ஜனநாயக ஆட்சிமுறை, பொறுப்பு கூறுதல், ஒத்துழைப்பு,
சட்டவாக்கத்தில் ஆண் பெண் சமநிலையை பேணுதல், இளைஞர் பங்கேற்பை வலுப்படுத்துதல்
போன்ற நிலைபேறான விடயங்களை பேணுவதற்கு பங்களிப்பு செய்வது அந்த ஒன்றியத்தின்
பிரதான நோக்கங்களாகும்.

பொதுமக்களின் வாக்குகளால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றமாகிய
வலுவான நிறுவனம் இந்நாட்டின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நிலையான
அடித்தளமாகும். மக்கள் பிரதிநிதிகளாக இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள்
இருக்கின்றோம். அதேபோன்று இலங்கை பாராளுமன்றம் இந்நாட்டின் சட்டமியற்றல், நிதி
முகாமைத்துவம், மேற்பார்வை மற்றும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான
நிறுவனமாகும்.

நீங்கள் தெரிவு செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசியலமைப்பின் ஊடாக
இந்நாட்டில் சட்டம் இயற்றுதல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற அடிப்படை
அதிகாரங்கள் சட்டவாக்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தற்போதைய கொவிட்
19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கு புதிய சட்டங்கள் தேவை என்று சுகாதார அமைச்சு
கூறுகிறது, எனினும் அதன் வரைவு, செயல்முறை உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து
அனுமதியளிப்பது சட்டமன்றத்தின் பணியாகும்.

அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரைக்கு அமைய, அரச நிதி தொடர்பான முழுமையான
அதிகாரம் பாராளுமன்றத்துக்கே காணப்படுகின்றது. இதில் வரவு
செலவுத்திட்டத்துக்கான அனுமதி வழங்குதல் பிரதான விடயமாகும். இந்நாட்டின்
எதிர்கால திட்டங்களுடன் தொடர்புடைய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் அரசின்
பொருளாதார முன்மொழிவுகள் என்பன பாராளுமன்றத்தின் ஊடாகவே
தீர்மானிக்கப்படுகின்றன.

விசாரணைகள் மற்றும் மேற்பார்வை என்பன தொடர்பில் பாராளுமன்றத்தில் அதிகளவு
பணியாற்றுவது குழு முறைமை எனும் சிறிய பாராளுமன்றத்தை குறிப்பிடலாம். இது
உலகம் முழுவதிலுமுள்ள பாராளுமன்றங்ககளால் பின்பற்றப்படும் வெற்றிகரமான
முறையாகும். சட்டவாக்கத்துக்கு நீங்கள் தெரிவு செய்து அனுப்பும் பிரதிநிதிகள்
இங்கு கட்சி பேதமின்றி கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர். அவர்கள்
மாத்திரமல்லாமல் உரிய துறைசார் நிபுணர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த
குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, எமது பாராளுமன்றம் 225 மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ளதுடன்,
அவர்கள் பொதுமக்களின் அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இலங்கை
பாராளுமன்றம் சபா மண்டபத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்காகவே குறிப்பிடத்தக்க
அளவு நேரத்தை ஒதுக்குகிறது. பிரதமர் அல்லது விடயத்துக்கு பொறுப்பான
அமைச்சருக்கு அந்த கேள்வியை முன்வைத்து விடைகளை பெற்றுக்கொள்ளும் முறைமை எமது
பாராளுமன்றத்தில் காணப்படுகின்றது.

அதேபோன்று, எமது பாராளுமன்றமும், ஏனைய நாடுகளைப் போலவே, உள்ளூர் மற்றும்
சர்வதேச மட்டங்களில் ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு ஆதரவான நிகழ்ச்சி நிரலை
நிறைவேற்றுகிறது.
உதாரணமாக, 2030 ஆம் ஆண்டு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில்
நாங்களும் ஒன்றிணைந்து இதனை அணுகுவதை குறிப்பிட்ட முடியும்.

சமூகத்துடனான நெருங்கிய தன்மை காரணமாக இலங்கை பாராளுமன்றம் உலகின் ஏனைய
பாராளுமன்றங்களை விட தனித்துவமானதாக காணப்படுகின்றது. உலகப் புகழ்பெற்ற
கட்டடக் கலைஞர் ஜெஃப்ரி பாவாவால் வடிவமைக்கப்பட்ட எமது பாராளுமன்றம், கொவிட்
காலத்திற்கு முன்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களால்
நிரம்பியிருக்காத நாளொன்று எனது அரசியல் வரலாற்றில் நினைவில் இல்லை. எனினும்,
எதிர்பாராத விதமாக முகங்கொத்துவரும் இந்த தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு, சுகாதார
ஒழுங்குமுறைகளை கட்டாயம் பேண வேண்டிய இக்காலகட்டத்தில் ஏனைய நிறுவனங்களை
போன்றே எமக்கும் சமூக இடைவெளியை பேணி செயற்படுவதற்கு ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கத்தில் தூர பகுதியிலுள்ள பாடசாலை அல்லது கிராமமொன்றிலிருந்து வரும்
மாணவர்கள் அல்லது மக்கள் எம்மை சந்திக்க முடியாமல் போவது ஒரு குறையாகும்.
எனினும், ஏனைய நாட்களை போன்றல்லாமல் இணையத்தை வினைத்திறனாக பயன்படுத்தி
பாராளுமன்ற பணிகளை தொடர்ந்தும் தடைகள் இன்றி மேற்கொள்ள முடிந்தமை வெற்றியாகும்.

இவ்வாறான நிலையில், நவீன விஞ்ஞானத்தினால் கூட இதுவரை அறியப்படாத ஒரு தோற்று
நோய்க்கு மத்தியில் அவசரகால சூழ்நிலைகளிலும் எமது பாராளுமன்றத்தின் பங்கு மிக
முக்கியமானது மற்றும் தீர்க்கமானது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இன்று
மாத்திரமல்லாமல் கொவிட் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியிலும் நாட்டை
ஒட்டுமொத்தமாக வடிவமைக்க சட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் மூலம் சரியான
திசையை காண்பிப்பது பாராளுமன்றமாகும்.

அதன் பயணம் இலகுவான ஒன்றல்ல என்பது சபாநாயகர் என்ற வகையில் என பார்வையாகும்.
எனினும், நான் பின்பற்றும் பௌத்த மதத்துக்கு அமைய சமூகத்தை ஒடுக்காமல், இந்த
பயணத்தை ஒற்றுமையாகவும் தாமதமில்லாமலும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறானால்,
சரியான நேரத்தில் மழை வரும், அறுவடை வளமாக இருக்கும், கட்சி, குல பேதமின்றி
நாம் கட்டியெழுப்ப வேண்டும் என நினைக்கும் நல்ல தேசத்தை கட்டியெழுப்பக்கூடிய
நாள் விரைவில் வரும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button