சினிமா

சினிமா திரையரங்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை தரமான முறையில் இடம்பெறவேண்டும்-கோப் குழுவின் தலைவர்..

சினிமா திரையரங்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை தரமற்ற நிலையில் காணப்படுவதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அதனால் சினிமா திரையரங்கங்கள் தொடர்பில் இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் சரித ஹேரத் 19 ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இலங்கை பாராளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் 2016 மற்றும் 2017 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு இந்த குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் மற்றும் நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள, அறவிடப்படாத திரைப்பட தயாரிப்பு கடன்கள் 141,292,087 ரூபாய் என கோப் குழுவில் புலப்பட்டது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழுக் கூட்டத்தில் சினிமா திரையரங்கங்களை நவீனமயப்படுத்த வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கையிடுமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும், இதுவரை அப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு பூர்த்தியடையும்போது கூட்டுத்தாபனம் 09 வங்கிக் கணக்குகளை பேணியிருப்பதுடன், சராசரியாக இவற்றின் மாதாந்த இருப்பு 29.2 மில்லியன் ரூபா என்றும் இங்கு புலப்பட்டது. இந்த நிறுவனத்தில் உரிய நிதி முகாமைத்துவம் இன்மை பாரிய பிரச்சினை என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் பெயரில் அருங்காட்சியகம் மற்றும் சினிமா பாடசாலையொன்றை அமைப்பதற்கு 99.9 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 05ஆம் திகதி இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காலத்துக்குள் இதன் பணிகள் பூர்த்தி செய்யப்படாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கட்டுமானத்துக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படவில்லை.

உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்யுமாறும் கோப் குழு, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச அவர்களுக்குப் பணிப்புரை விடுத்தது.

சினிமா பாடசாலையொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூற்று ஆய்வினை மேற்கொள்றுமாறும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு குழு மேலும் ஆலோசனை வழங்கியது.

2019ஆம் ஆண்டு கலாசாரத் திணைக்களத்தில் நிரந்தர பதவியில் சேவை உறுதிப்படுத்தப்படாத இரு அதிகாரிகள் மற்றும் இன்னுமொரு அதிகாரியை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் காணப்படும் மூன்று வெற்றிடங்களில் கடமையாற்ற நியமிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவாக 3,098,046 ரூபா வழங்கப்பட்டுள்ளமையும் இங்கு புலப்பட்டது.

மருதானை சினிசிட்டி சினிமா திரையரங்கு 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி வரை அறவிடப்பட வேண்டிய சினிமாவுக்கான கூலி 12,343,433 ரூபா என்பதுடன், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்தத் தொகை அறவிடப்படாமை தொடர்பிலும் கோப் குழு கவனம் செலுத்தியது.

களனியில் காணப்படும் சரசவி கலையரங்கில் தயாரிப்பு வசதிகளை அதிகரிப்பது தொடர்பில் 25 மில்லியன் ரூபாவும், திரைப்பட பாதுகாப்பு நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்த போதும் குறித்த ஆண்டில் அந்த நிதி பயன்படுத்தப்படாமை, தேசிய பயிற்சி கல்லூரியொன்றை ஆரம்பிப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்த 50 மில்லியன் ரூபா நிதியில் 500,000 ரூபா மாத்திரம் செலவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் குழுவில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

2017 மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி சினிமா விருது வழங்கும் நிகழ்வுக்கு 44,394,717 ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்ட கொள்முதல் வழிகாட்டியை பின்பற்றாமை தொடர்பிலும் கூட்டுத்தாபனத்திடம் குழு வினவியது.

செலசினே நிறுவனத்துக்கு இந்த நிதி செலுத்தப்பட்டிருந்ததுடன், அது தொடர்பில் கண்டறிந்து அறிக்கையொன்றை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு அறிவித்தார்.

2020 – 2025 திட்டத்துக்கு இணங்கும் வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டமொன்று தயாரிக்கப்படாமை தொடர்பிலும் குழு அவதானம் செலுத்தியது.

தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை 2015 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படாமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு குழு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியது.

இதுவரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் 57 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இணைத்துக்கொள்ளும் பொறிமுறை தொடர்பான மறுசீரமைப்புகளுக்கு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் ஊடாக அனுமதியை பெற்றுக்கொள்ளாமை தொடர்பிலும் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.

கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரிகள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் குழு அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரைத்தது. ஒரு சில ஒழுக்காற்று விசாரணைகள் ஒன்றரை வருடங்களாக தாமதமாகுதல் சிக்கலுக்குரிய விடயம் என குழுவின் கருத்தாக இருந்தது.

இதுவரை திரைப்பட விநியோகம் தனியார் துறையினரால் மேற்கொள்ளப்படுவதுடன், அதனை அரசாங்கத்துக்கு கையகப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தயாராக உள்ளதாகவும் பேராசிரியர் கபில குணவர்தன குழுவில் தெரிவித்தார்.

சினிமா திரையரங்கங்கள் ஊடாக பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் டிக்கட்களை இலத்திரனியல் முறையில் வழங்கும் தேவை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர குழுவில் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, இரான் விக்ரமரத்ன, கலாநிதி ஹர்ஷ டி. சில்வா, அநுரகுமார திசாநாயக்க, ஜகத் புஷ்பகுமார, ஜயந்த சமரவீர, பிரேம்நாத் சி. தொலவத்த, எஸ். இராசமாணிக்கம் மற்றும் உத்திக பிரேமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button