அரசியல்செய்திகள்

சிறிய வர்த்தக நிலையமொன்றை அமைக்க ஒரே நாளில் அனுமதி-ஜனாதிபதி..

வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இவ்வாறான நிர்மாணப்பணித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது நிலவும் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நீண்டகால தாமதம் காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதைக் கவனத்தில் கொள்ளுமாறும் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின்தும் மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களினதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் .

“நடைமுறையிலுளன்ள சட்ட திட்டங்களை இலகுபடுத்தி, மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முடியுமான அளவு குறைப்பது அரசாங்கத்தினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும்” என்பதனையும் சனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான திட்டங்களை அனுமதிப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரமளிப்பதுடன், குறித்த மன்றங்கள் துரிதமாக அவற்றுக்குரிய ஏற்பாடுகளைச் செய்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கும் உரிய பொறிமுறையை உருவாக்கும்படியும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும், அனுமதியளிக்கப்படாது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு அனுமதியை வழங்குவது தொடர்பான சட்டம் குறித்த அறிவுள்ள அதிகாரி ஒருவரை நியமித்து அதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு, முதன்முறையாக வீடொன்றை கொள்வனவு செய்யும் ஒருவருக்கு நீண்டகால கடன் மற்றும் நிவாரண வட்டி முறைமையின் கீழ் கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் – இவ்வாறான திட்டங்களை அனுமதிக்கும்போது, நாடு முழுமைக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தாது, பூகோள நிலைமைகளை கருத்திற்கொண்டு, மாற்றுப் பரிந்துரைகளை வழங்கி, அவற்றின் அடுப்படையில் மீளுருவாக்கப்படும் திட்டங்களுக்கு அனுமதிகளை வழங்குவது குறித்தும் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், மாகாண மற்றும் பிரதேசங்களின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கண்டறிந்து அவற்றுக்கான அனுமதியையும் அரசாங்க நிறுவனங்களினூடாகவே வழங்குவதுடன், அவை தொடர்பில் முதலீட்டுச் சபைக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதுடன், அதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வலுவூட்டப்படுவதுடன், தமது திட்டங்களை அவர்கள் தாமதமின்றித் தொடங்குவதற்கும் அது ஏதுவாக அமையும் என்பதனையும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி எடுத்துக்கூறினார்.

Related Articles

Back to top button