செய்திகள்மலையகம்

சிறுமியின் மரணம் தொடர்பில் மேலும் இரு டயகம பெண்களிடம் விசாரணை.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் நேற்றைய தினம் 6 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

சிறுமியின் தாயிடம் மேலதிக வாக்குமூலமொன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், சிறுமியின் சித்தப்பா, சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்

இதேவேளை, குறித்த சிறுமிக்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் டயகம பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண்கள் கடமையாற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

குறித்த இரண்டு பெண்களையும், சிறுமியை அழைத்து வந்த நபரே, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு ரிஷாட் பதியூதீனின் வீட்டில் முன்னதாக கடமையாற்றிய இரண்டு பெண்களிடமும் டயகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் கடமையாற்றிய டயகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களின் வாக்குமூலத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பொரள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார். 

Related Articles

Back to top button