ஆன்மீகம்

சிலாபம்- முன்னேஸ்வரம் சிவாலயம்..

முன்னேஸ்வரப் பதியமர்ந்த மூத்தவனே சிவனே
முத்தமிழை எமக்களித்த பேரருளே ஐயா
அன்னை வடிவாம்பிகையுடன் அருள்கின்ற சிவனே
அச்சமில்லா நிம்மதியைத் தந்திடுவாய் ஐயா..

நாடிவந்து உன்பாதம் சரணடைந்தோம் சிவனே
நல்லருளை வழங்கியெமை காத்தருள்வாய் ஐயா
பாடித் துதித்துன்னை நாம் போற்றுகின்றோம் சிவனே
பார்த்து அருள் வழங்கியெமை ஆதரிப்பாய் ஐயா..

பூவுலகில் எமக்குத் துணை நீயன்றோ சிவனே
பூமகளின் மைந்தரெமை அணைத்தருள்வாய் ஐயா
மூவுலகும் ஆளுகின்ற மூத்தவனே சிவனே
மூண்டு வரும் துன்பங்களைத் துடைத்தெறிவாய் ஐயா..

வேதங்கள் போற்றுகின்ற மெய்ப் பொருளே சிவனே
வேதனைகள் களைந்திடவே வந்திடுவாய் ஐயா
பேதலித்து நிற்பவர்க்கு வழிகாட்டும் சிவனே
பேதமைகள் போக்கியெமைக் காத்தருள்வாய் ஐயா..

இராமபிரான் பூசையினால் பெருமை கொண்ட சிவனே
இரவு பகல் துணையிருந்து பார்த்தருள்வாய் ஐயா
அறம் காத்து மறம் அழித்து அருள்கின்ற சிவனே
அச்சமில்லா நிம்மதியைத் தந்திடுவாய் ஐயா..

முன்னேஸ்வரப் பதியில் கோயில் கொண்ட சிவனே
முத்தி தரும் வழியெமக்குக் காட்டிடுவாய் ஐயா
சிந்தையிலே உனையிருத்திப் போற்றுகின்றோம் சிவனே
சிறந்த நல்ல வாழ்வதனைத் தந்திடுவாய் ஐயா.

ஆக்கம்-த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button