காலநிலைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 1,846 குடும்பங்களை சேர்ந்த 5,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

நேற்று மாலை 4 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 3 வீடு முழுமையாகவும், 273 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களை சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 650 குடும்பங்களை சேர்ந்த 2,012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 249 குடும்பங்களை சேர்ந்த 676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 07 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 654 குடும்பங்களை சேர்ந்த 1,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முழுமையாகவும், 194 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது. இரணைதீவில் அனர்த்தத்தினால் சிக்கியுள்ள 88 குடும்பங்களை சேர்ந்த 134 பேர் தொடர்ந்தும் 2 பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 293 குடும்பங்களை சேர்ந்த 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை அவ்வந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button