அரசியல்செய்திகள்

சுதந்திரமான தேர்தலை நடத்துவது பாரிய சவால் – மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய சட்டத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கலும், தாமதமும்தான் சுதந்திர தேர்தலுக்கு சவாலாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தலுடன் வன்முறையும் ஒன்றித்து போயுள்ளமை, இலங்கையில் இன்று, நேற்று ஏற்பட்ட கலாசாரமல்ல.
1947, 1952, 1956, 1960, 1965, 1970, 1974 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் இருந்து தொடர்ந்து வரும் ஒரு தேர்தல் கலாசாரமாகவே இந்த வன்முறை காணப்படுகிறது.

இந்த வன்முறையானது, வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கும், வாக்குப்பெட்டிகளை கொளுத்தும் அளவுக்கும் சென்றுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
உண்மையில், இவ்வாறான கலாசாரங்களை தடுக்க இலங்கையில் இன்னும் முறையான சட்டத்திட்டங்கள் இல்லை என்றே கூறவேண்டும்.

இலங்கையிலுள்ள சட்டங்கள், இவ்வாறான குற்றச்செயல்களை தேர்தல் குற்றமாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய குற்றமாகவும்தான் கருதுகின்றன.
இதனால், இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக, தண்டனைக் கிடைப்பதும் குறைவாகவே இருக்கிறது.

அத்தோடு, வாக்குப்பெட்டியை உடைத்த நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையே கிடைக்கிறது.

இதனால், வாக்குப்பெட்டியை உடைத்தவர் தண்டனையிலிருந்து தப்பித்து, மீண்டும் தேர்தலில் களமிறங்கி வெற்றிப் பெற்று, அதிகாரத்திற்கும் வரக்கூடிய நிலைமையே இங்கு காணப்படுகிறது
கள்ள வாக்குகளை இடுவோருக்கு எதிராகக்கூட கடுமையான சட்டத்திட்டங்கள் உள்ளன. ஆனால், தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக முறையான சட்டத்திட்டங்கள் நாட்டில் இல்லாதிருப்பது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும்.

இவை தான் சுதந்திர தேர்தலுக்கு தடையாக இருக்கிறது.  நீதியை நிலைநாட்ட எடுக்கும் காலமும், சட்டத்திட்டங்களை உரியவகையில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கலும்தான் இவற்றுக்கு எல்லாம் காரணமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button