சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அடையாளப்படுத்துவோம்!!- ‘ஒருமி’ மலையக சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம்!!
பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையே 2019.01.28 செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் திட்டமிட்ட வகையில் கூட்டுத் துரோகத்திற்கும் ஏமாற்றத்திற்கும் மட்டுமல்ல வறுமைக்குள்ளும் கடனுக்குள்ளும் வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமையை ‘ஒருமி’ மலையக சிவில் சமூக அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு இதனை ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ முடியாது என்பதையும் வலியுறுத்திக் கூறுகின்றது.
கூட்டு ஒப்பந்தம் எனும் அடிமைசாசனம் மூலம் கட்டமைப்பட்ட வறுமைக்குள் தொழிலாளர் சமூகத்தைத் தள்ளி தங்கிவாழும் வாழ்வு நிலைக்குள் வைப்பதுதான் தொழிற்சங்கத்தின் கடமையும் பொறுப்புமா? பொருளாதார ரீதியில் பாதுகாப்பான சூழ்நிலையில் கூட்டு சமூகமாக வாழக்கூடாது எனும் மனநிலையிலேயே இவ்வொப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.
தற்போதைய பிரதமர் தான் ஜனநாயகத்தின் காவலன் என்றும் அலரிமாளிகை ஜனநாயகத்தின் அடையாளம் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். அவரின் தலைமையில் ஜனநாயகத்தின் அடையாளமான இடத்தில் தாமே கொடுத்த சம்பள வாக்குறுதியை மீறி உழைக்கும் மக்கள் சமூகத்தின் வாழ்வு பறித்தழிக்கும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டமை எந்த வகையில் ஜனநாயகமாகும். வறுமை கொதிந்தெழுந்து பேசும் நாளில் ஜனநாயக விரோதிகளின் முகம் கிழிக்கப்படும்.
நாட்டில் 71ஆவது சுதந்திர விழாவுக்கு ஆயத்தப்பட்டுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சுமக்கும் மக்கள் சமூகத்தின் மீது பொருளாதார ஒடுக்குமுறையை சுமத்தி சுதந்திரம் பறித்து அவர்களின் அமைதியான ஜனநாயக நீரோட்ட வாழ்வை அழித்தொழிக்கும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் மூலம் யுத்த வெற்றி மனநிலையை உருவாக்கி நாட்டை அழித்து இன அழிப்பிற்கு வெற்றி விழா நடத்துபவர்கள் மீண்டும் ஒருமுறை உண்மையான சுதந்திரத்தை அவமானப்படுத்தியுள்ளனர்.
இதனை கண்டிக்கும் முகமாகவும் ஒடுக்கப்படும் மலையக மக்களை சுதந்திர வாழ்விலிருந்து நீக்கம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் மலையகமெங்கும் கறுப்புக்கொடியேற்றி 71ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக அடையாளப்படுத்துமாறு மலையக உணர்வுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.