உலகம்

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்களும் சென்றனர்.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து பணிகளை முடுக்கி விட நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு அமைச்சர்களும் அந்தந்த பகுதிக்கு நேரடியாக சென்று மழை நீர் வடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இன்றும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவது மழை நீரை வடிய வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்றார். தங்கசாலையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் அங்கிருந்து பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளிலும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

ஆர்.கே.நகர் பகுதியில் மக்களை சந்தித்து மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்த முதலமைச்சர்,  சென்னியம்மன் கோவில் தெருவில் உள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டார். முகாமில் உள்ளவர்களுக்கு ரொட்டி மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், வேலுமணி ஆகியோரும் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button