விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸின் அடுத்த தலைவர் யார்?

15  ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), தலைவர் தோனி (ரூ.12 கோடி), மொயீன் அலி (ரூ.8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி) ஆகியோரை தக்க வைத்தது. 40 வயதான தோனி பெரும்பாலும் அடுத்த ஐ.பி.எல். போட்டியுடன் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு போல அவரது துடுப்பாட்டம் இல்லை. அதனால் தக்கவைக்கப்படும் வீரர்களை வரிசைப்படுத்துவதில் தோனி தனது பெயரை 2 ஆவது இடத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதனால் அவரது ஊதியம் கடந்த ஆண்டைவிட 3  கோடி ரூபா குறைந்து விட்டது. அதேபோல ஜடேஜாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா கூறுகையில், “நிச்சயம் தோனி தான், ஜடேஜாவுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார்.

அணியில் ஜடேஜாவின் மதிப்பு அவருக்கு நன்கு தெரியும். தோனி ஓய்வு பெறும் போது ஜடேஜா தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அவர்கள் வழங்கும் தொகைக்கு ஜடேஜா தகுதியானவர்” என்றார். மற்றொரு இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறும்போது, ‘சென்னை அணியின் அடுத்த தலைவர் என்ற அடிப்படையில் தான் ஜடேஜாவுக்கு இவ்வளவு தொகை வழங்கப்படும் என்று நினைக்கிறேன். அவர் அற்புதமான ஒரு வீரர்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே தோனி இனி விளையாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வரும் போது தலைவர் பொறுப்பை ஜடேஜா ஏற்பார் என்று கருதுகிறேன்” என்றார்.

Related Articles

Back to top button