செய்திகள்

“சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை”

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதுடன், அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். சேதனப் பசளை மற்றும் சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விவசாய பெருமக்கள் மத்தியில் இது தொடர்பில் தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமையால் அவர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். பாடசாலைகள் மற்றும் விகாரைகளை மையமாகக் கொண்டு சேதனப் பயிர்ச்செய்கைக்கு பிள்ளைகள் மற்றும் மக்களை பழக்கப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வருமாறு பிரதமர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சேதனப் பயிர்ச்செய்கையை நாட்டில் விரிவுபடுத்துவதற்கான நிபுணர்களின் ஆதரவை பாராட்டுவதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சேதனப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதியும் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டார். முறையான வேலைத்திட்டமொன்றின் மூலம் நாட்டில் ஆரோக்கியமான மக்களை உருவாக்குவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக நம் நாட்டின் பயிர்ச்செய்கை இரசாயன பாவனைக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளமையால், மக்களின் ஆரோக்கியம் மோசமடைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார். பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் காரணமாக, சேதனப் பயிர்ச்செய்கைக்கு உதவும் நுண்ணுயிர்கள் மற்றும் மண் நாசமாக்கப்பட்டுள்ளதுடன், நீர் மாசு மற்றும் சூழல் மாசும் அதிகரித்துள்ளது.

கணக்காய்வாளர் அறிக்கையின்படி சுமார் 200 நச்சுப் பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதிலிருந்து நிதி சலுகைகள் மற்றும் பிற சலுகைகளைப் பெறும் நபர்கள் சேதனப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டுவதாக வைத்தியர் அனுருத்த பாதெனிய கூறினார். இரசாயன உர பாவனை காரணமாக விவசாயிகள் ஏழைகளாகி உள்ளதாகவும், நாட்டில் சிறுநீரக நோயாளர்கள் மற்றும் புற்று நோயாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த வைத்தியர் அனுருத்த பாதெனி, இரசயான பாவனை மற்றும் விஷ உணவு பாவனை காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 புற்றுநோயாளர்கள் மரணிப்பதாகவும் குறிப்பிட்டார். பிள்ளைகளுக்காக நீரிழிவு சிகிச்சை நிலையங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுதல், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் ஊனமுற்ற குழந்தை பிறப்பு அதிகரிப்பு வரை இந்நிலையே காரணமாகியுள்ளதாக வைத்தியர் அனுருத்த பாதெனிய குறிப்பிட்டார்.

நெல் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான போதியளவு உரம் நாட்டில் காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உரத்தை சந்தைக்கு வெளியிடாது போலியான உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளதாக அங்கு வருகைத்தந்த அதிகாரிகள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர். பெரும் போகத்திற்கான சேதனப் பசளையை எவ்வித தட்டுப்பாடும் இன்றி வழங்க முடியும் என்றும்; சுமார் 20 வீதமான விவசாயிகள் ஏற்கனவே சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இரசாயன பசளை பயன்படுத்துவதை விட சேதனப் பசளையை பயன்படுத்துவதன் மூலம் தரமான அதிக அறுவடையை பெற முடியும். சேதனப் பயிர்ச்செய்கை மூலமான காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அதிக கேள்வியும் அதிக விலையும் உள்ளது என கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டு சந்தைகளில் அதிக கேள்வி இருப்பதால் கியூபா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே சேதனப் பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துகின்றன என்பது இந்த கூட்டத்தில் தெரியவந்தது.

பல மாவட்டங்களுக்கு இதுவரை சுமார் 95 வீதமான பசளை வழங்கப்பட்டுள்ளதுடன், சேதன உற்பத்தியை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமொன்றை வகுத்துள்ளதாக தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள், நட்டம் ஏற்படின் அதற்கு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி வழங்குவதாக நம்பிக்கை வெளியிட்டார்.

சேதனப் பயிர்ச்செய்கைக்கு தேவையான ஆதரவை வழங்க சுமார் 12 வெளிநாட்டு தூதரகங்கள் இதுவரை ஒப்புக் கொண்டுள்ளதுடன், சேதனப் பயிர்ச்செய்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித், கமத்தொழில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜே.எம்.உதித கே ஜயசிங்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய, நிலையான அபிவிருத்தி சபையின் தலைவர் கிறிஸ் தர்மகீர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

Back to top button