...
செய்திகள்

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022 ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.

நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.

இந்தச் சவால்களைத் தொடர்வதற்கும் வெற்றிகொள்வதற்கும், மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

தொற்றுப் பரவல் காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை என்பன இதன் மூலம் பாதுகாக்கப்படும். அதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் செயற்படுத்த எம்மால் முடியும். தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மூலமே அவ்வாறான எழுச்சியை நோக்கிப் பயணிக்க முடியும். வெற்றிகொண்ட சவால்களைப் போன்றே, பெற்றுக்கொண்ட அனுபவங்களும் இப்புத்தாண்டில் நம்மை ஊக்குவிக்கும்.

உலகளாவிய தொற்றுப் பரவலானது, பொதுமக்களின் அபிலாஷைகளை அடைவதற்கான முன்னேற்றத்தை மோசமாகப் பாதிக்கச் செய்துள்ளது. இவ்வாறான நிலைமையிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு என்பன நிலைநாட்டப்பட்டுள்ளன. பல புதிய சீர்த்திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன. செயலற்றிருந்த அரச மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மீண்டும் செயற்படுத்தவும் அவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்லவும் தற்போதைய அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதக நிலைமைகளைச் சீர்செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உலகளாவிய ரீதியில் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நீங்கள் தற்போது அனுபவித்துவரும் சுதந்திரம், இந்நாட்டு மக்களின் மகத்தான தியாகத்தின் பிரதிபலனாகும் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

மக்களைப் பாதிப்படையச் செய்யும் அடிப்படையற்ற அரசியல் போராட்டங்கள், நாட்டை நேசிக்கின்ற பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளமையானது, அரசாங்கத்தின் மீது அம்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.

கடந்த காலம் முதல் தொடர்ந்து பேணப்பட்டு வருகின்ற இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டே புதிய வெளிநாட்டுத் தொடர்புகளையும் கட்டியெழுப்பக் கிடைத்துள்ளமையானது, எமக்குக் கிடைத்த தனித்துவமான முதலீடாகவே நான் பார்க்கிறேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டை, மக்களுக்கான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணித்து, மாற்றத்துடன்கூடிய புத்தாண்டாக மாற்ற அணிதிரளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டு, உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் தைரியமிக்கதுமான புத்தாண்டாக அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen