செய்திகள்

ஜனாதிபதி முன்னெடுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா பூரண ஒத்துழைப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக துரித நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு தலைமைத்துவத்தை வழங்கி வருவதன் ஊடாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உலகத்தினருக்கு சிறந்த முன்னுதாரணமாக செயற்படுகின்றார் என ஐநா சபையின் பிரதி பொதுச் செயலாளர் Minguel Angle Morations தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐநா சபையின் பிரதிப் பொதுச்செயலாளர் (30) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அவர்களை சந்தித்தபோது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுத்துவரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ ஹுட்டேரஸ் சார்பிலும் பாராட்டு தெரிவித்தார்.

ஸ்பெயின் நாட்டின் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஐநா பாதுகாப்பு சபையின் முன்னாள் தலைவருமான அவர், ஐநா பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதியாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஐநா பிரதிப் பொதுச்செயலாளர், இலங்கை ஜனாதிபதியினால் தற்போது முன்னெடுக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இன்று முழு உலகத்தினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்தோடு இந்நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதற்காக ஐநா பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றினை வெகுவிரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐநா பொதுச்செயலாளர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது நாடான ஸ்பெயின் நாட்டில் 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற அல்கைதா தாக்குதலை இதன்போது நினைவுகூர்ந்த பிரதிப் பொதுச்செயலாளர், ஸ்பெயின் நாட்டைப் போன்றே இலங்கையும் நட்புறவான பல சமூகங்களைக் கொண்ட சிறந்த விருந்தோம்பல் நாடாகும் எனவும் அவ்வாறான நாடுகள் தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகுதல் துரதிஷ்டவசமானவை எனவும் தெரிவித்தார்.

ஐநா நாகரீகங்களுக்கான கூட்டமைப்பினால் தற்போது மத வணக்கஸ்தலங்களின் பாதுகாப்பு பற்றிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதிப் பொதுச்செயலாளர், அதற்கான ஆலோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ ஹுட்டேரஸ் மற்றும் பிரதிப் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த துயரமான சந்தர்ப்பத்தில் ஐநா சபையின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பது பெரும் பலமாகும் எனத் தெரிவித்தார்.

தற்போது எதிர்கொள்ள நேர்ந்துள்ள பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கான ஆற்றல் இலங்கை பாதுகாப்பு துறையினரிடம் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்காக கிடைக்கப்பெறும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி மிக முக்கியமானவை என தெரிவித்தார். மேலும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டிற்குள் கொண்டுவர தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஐநா சபையின் இலங்கைக்கான நிரந்த பிரதிநிதி ஹெனா சிங்கர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியதுங்க உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com