உலகம்

ஜப்பான் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பிரதமர் ஷின்சோ அபே அறிவிப்பு

ஜப்பான் நாட்டு பாராளுமன்றத்தை கலைப்பதாக பிரதமர் ஷின்சோ அபே இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து அங்கு அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை மிரட்டுவதற்காக ஜப்பான் நாட்டின் குவாம் தீவில் உள்ள கடற்படை தளத்தை குறிவைத்து வட கொரியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

வடகொரியா மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், வடகொரியாவுக்கு எதிரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு வெறும் எட்டு சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். யாரை ஆதரிப்பது? என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என சுமார் 20 சதவீதம் பேர் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, மக்கள் செல்வாக்கு உள்ளபோதே பாராளுமன்ற தேர்தலை நடத்தி மீண்டும் பிரதமராக தீர்மானித்துள்ள ஷின்சோ அபே வரும் 28-ம் தேதி பாராளுமன்றத்தை (பிரதிநிதிகள் சபை) கலைக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் 22-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் லிபரல் குடியரசு கட்சிக்கும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கும்தான் நேரடி போட்டி என்றாலும், டோக்கியோ நகர மேயராக பதவி வகிக்கும் யுரிக்கோ கோய்க்கே தலைமையிலான டோக்கியோ வாசிகள் முதலில் (Tokyo Residents First) கட்சியும் வேட்பாளர்களை முன்னிறுத்தும் என தெரிகிறது.

உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மூன்றாவது பெரிய நாடாக அறியப்படும் ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் பதவி ஏற்பார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button