விளையாட்டு

ஜாம்பவான்களின் பெயர்கள் மைதான அரங்குகளுக்கு…

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஐவரின் பெயர்கள் இலங்கையின் முன்னணி மைதானங்களின் அரங்குகளுக்கு சூட்டப்படவுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அர்ஜுன ரணதுங்க , அரவிந்தடி சில்வா , மஹேல ஜெயவர்தன , குமார் சங்ககார ஆகியோரது பெயர்கள் இவ்வாறு சூட்டப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக இலங்கையின் புகழை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற மலையக மைந்தனின் பெயரும் சிறப்பு மைதானமொன்றுக்கு சூட்டப்படவுள்ளது.

குறித்த ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களை கௌரவிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன்பிரகாரம்  இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரது பெயர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 3 அரங்குகளுக்கு சூட்டி கௌரவிக்கப்படவுள்ளது.

இதேவேளை பல்லேகல சர்வதேச மைதானத்தின் அரங்குகளுக்கு கண்டி மண்ணின் சொந்த ஊர் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரது பெயர்கள் சூட்டப்படவுள்ளன.

முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களின் பெயர்கள் மைதான அரங்குகளுக்கு சூட்டப்படுவது வழமையான ஒன்றாகும்.

இதற்கு சிறந்த உதாரணமாக இந்திய அணியின் தற்போதைய தலைவர் விராட் கோஹ்லியின் பெயர் டெல்லி பெரோஷா கொட்லா மைதானத்தின் அரங்குக்கு அண்மையில் சூட்டப்பட்டது.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று சரியாக 11 ஆண்டுகளில் இந்த பெயர் சூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் பல்லேகல அரங்கிற்கு மலையக மைந்தன் முத்தையா முரளிதரனின் பெயரை சூட்ட மத்திய மாகாண சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தபோதும் அது இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.

Related Articles

Back to top button
image download