நுவரெலியாமலையகம்

டயகம சிறுமி விவகாரத்தை மறைக்க பணம் பெற்றுத் தருவதாகக் கூறிய பொலிஸ் அதிகாரியைக் கைது செய்ய நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங் களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சம்பவத்தை மறைக்க சிறுமியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் மூத்த பொலிஸ் அதிகாரியை கைது செய்ய விசேட பொலிஸ் குழு விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கௌரவமானவர்கள் என்றும் அவர்கள் இவ்வாறு செயற்பட மாட்டார்கள் என்றும் குறித்த பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல தேவை யில்லை என்றும் குறித்த விடயத்தை பொலிஸாருக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுமார் 50 ஆயிரம் ரூபா வாங்கித் தருகிறேன் குறித்த சம்பவத்தை முடித்து விடுங்கள் என்றும் கூறி தீவிரமாக வற்புறுத்தியதாகத் தெரியவந்துள்ளது.

டயகம சிறுமி உயிரிழந்த பின்னர் அவரின் சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இது தெரியவந்துள்ளது.

அதன்படி, பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்காமல் குறித்த சம்பவத்தை பொதுவான தற்கொலையாகக் கருதி தொடர்ந்து குறித்த சம்பவத்தை நீடிக்க வேண்டாம் என்று டயகம சிறுமியின் சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வற்புறுத்தியதாகத் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் விசேட பொலிஸ் குழுவினர் குறித்த அதிகாரியைத் தேடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த அதிகாரி பொலிஸ் தலைமையகத்தில் பணி புரியும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது, குறித்த அதிகாரியின் தொலைபேசிப் பதிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அதிகாரி ரிஷாத் பதியுதீனின் முன்னாள் பாதுகாவலர் என்றும் அவர் பதியுதீன் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.

டயகம சிறுமி தீக்காயங்களுக்குள்ளான பின்னர் ரிஷாத் பதியுதீனின் மாமனார் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த சம்பவத்தை அறிவித்ததாக பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி பதியுதீனின் வீட்டிற்குச் சென்று அந்த நேரம் அங்கிருந்த சிறுமியின் உறவினர்களைச் சந்தித்து குறித்த சம்பவத்தை மறைக்க அழுத்தம் கொடுத்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

சாட்சியாளர்களை மிரட்டுவது மற்றும் லஞ்சம் கொடுக்க முயல்வது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரியைக் கைது செய்ய விசாரணை நடந்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Back to top button