செய்திகள்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பொது மக்களை சென்றடைய வேண்டும் – இலங்கை பத்திரிகை ஸ்தாபனத் தலைவர்

தகவல் அறியும் உரிமைச்சட்டமானது தற்போது எமது நாட்டின் நடைமுறையில் உள்ளதோடு , இது தொடர்பான விளக்கம் பொது மக்களை முறையாகச் சென்றடைய வேண்டும். தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் செயற்பாட்டை ஊடகவியலாளர்களால் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் தெரிவித்தார். இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைவதனை முன்னிட்டு ‘ தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்களை விழிப்பூட்டல்’ எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் என்பவற்றின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய் கிழமை கொழும்பில் ஆரம்பமானது. அந்நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் முதன் முறையாக 1994 ஆம் ஆண்டிலே தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பிலான பரவலான கலந்துரையாடல் உருவான போதும் , அவை பூரண நிறைவினை எட்டவில்லை. அதனைத் தொடர்ந்து 1996 இல் ஊடகத்துறை அமைச்சரால் ஆர்.டி.குணசேகர ஆணைக்குழு நிறுவப்பட்டு இவ்விடயம் தொடர்பான பரிந்துரைகள் பெறப்பட்டன. அரசியல் அமைப்பிலே தகவல் அறியும் உரிமைச்சட்டம் சேர்க்கப்பட வேண்டும் எனவும், அதன் மூலம் மக்களின் தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.

எனினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக அப்பரிந்துரைகள் செயலிழந்தன. பின் 1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் தகவல் அறியும் உரிமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனைத் தொடர்ந்து இலஙகையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

தற்போது நமது நாட்டில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறையில் உள்ளதோடு , உரிய அலுவலகங்களுக்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 8000 வரையான அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் அறிவூட்டப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும் எமது நாடு உட்பட பல நாடுகளில் இச்சட்டதினை அமுல்படுத்துவது தொடர்பில் குறைபாடுகள் உள்ளன. உரிய அமைச்சுக்களால் அலுவலகங்களுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்படாமை ஆணையாளர்களை அணுக முடியாமை, மொழி தொடர்பான பிரச்சினை போன்றன தகவல் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே இவ்வாறானதொரு சர்வதேச ரீதியான மாநாட்டின் தகவல் பெறும் உரிமைச்சட்டம் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்துப் பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடிவதுடன் , குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

அத்தோடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான போதிய தெளிவு பொது மக்களை சென்றடைய வேண்டும். என்பதுடன் , அதனை ஊடகவியலாளர்கள் முறையாக கையாள வேண்டும் என்றார்.

நன்றி வீரகேசரி

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button