செய்திகள்

தடுப்பூசியைப் பெறாமல் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும்

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகள் சீனாவில் உற்பத்திசெய்யப்பட்ட சைனோபாம் தடுப்பூசியைப் பெறுவதற்குத் தயக்கம் காண்பிக்கின்றனர். சீனாவின் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மேற்படி நாடுகளுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படக்கூடும் என்ற நியாயமான அச்சத்தின் விளைவே இதுவாகும். எனவே தமது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தடுப்பூசியைப் பெறாமல் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்கம் உரியவாறான தீர்வை வழங்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் இளைஞர் முன்னணியினால் நிகழ்நிலையில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

ஒருபுறம் அரிசி, பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்குத் தயாராகிவரும் அரசாங்கம் மறுபுறம் பால்மா மற்றும் சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய சூழ்நிலையைத் தோற்றுவித்து சுபீட்சத்திற்கான எதிர்காலத்தின் குறிகாட்டிகளை மக்களுக்குக் காண்பித்திருக்கின்றது. நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்கி, கடன்களைப்பெற்று, அதனை மையப்படுத்தி பொருளாதாரத்தை இயக்கவேண்டிய மிகமோசமானதொரு நிலையில் அரசாங்கம் இருக்கின்றது.

இன்றளவில் நாட்டில் வாழும் இளைஞர், யுவதிகள் தமது எதிர்காலம் குறித்து பெரிதும் அச்சமடைந்திருக்கின்றார்கள். உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதே தற்போது நெருக்கடிக்குரிய விடயமாக மாறியிருக்கின்றது. அதேபோன்று இளைஞர், யுவதிகளுக்கான தடுப்பூசியைப் பொறுத்தவரை சீனாவில் உற்பத்திசெய்யப்பட்ட சைனோபாம் தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இருப்பினும் சீனாவின் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள் உள்நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. எனவே உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு என்பவற்றுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் பெரும்பாலான இளைஞர், யுவதிகள் அரசாங்கம் வழங்குகின்ற சைனோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் காண்பிக்கவில்லை. எனவே இதனைக்கருத்திற்கொண்டு வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்கு ஏற்றவகையிலான செயற்திட்டமொன்றை அரசாங்கம் வகுக்கவேண்டும்.

இவ்வாறு கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதில் தோல்வியடைந்த அரசாங்கம், மறுபுறம் பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதிலும் தோல்விகண்டிருக்கின்றது. அதன் ஓரங்கமாக டொலர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாண்பதற்கான நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீதமான பங்குகள் வெறுமனே 250 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குப் பணம் இல்லாததால், அதற்கென கடன் வழங்குமாறு இந்தியாவிடம் கோரப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து கடன்பணம் கிடைக்கப்பெறாவிட்டால், அதனைத்தொடர்ந்து நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

அடுத்ததாகக் கடந்த காலத்தில் அரிசி பதுக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றியிருப்பதாக அரசாங்கம் ஓர் நாடகத்தை அரங்கேற்றியது. அதுமாத்திரமன்றி அரிசிக்கென நிர்ணயவிலைகளையும் விதித்தது. ஆனால் இப்போது அந்த நிர்ணயவிலைகளையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒருகிலோ கீரி சம்பா அரிசியின் நிர்ணயவிலையை 120 ரூபாவிலிருந்து 140 ரூபாவரையும், ஒருகிலோ சம்பா அரிசியின் நிர்ணயவிலையை 103 ரூபாவிலிருந்து 120 ரூபாவரையும் அதிகரிக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen