தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதியின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலனியில் இணைந்து கொண்டு இங்குள்ள அபிவிருத்திகளை செய்து கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவேண்டும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். வட்டுக் கோட்டை மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆரம்ப பிரிவிற்கான கற்றல் வள நிலையமும் தொழில்நுட்ப ஆய்வு கூடமும் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று பாடசாலையின் அதிபர் புஸ்பராணி பஞ்ஞாச்சரம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போ இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக ஜனாதிபதி செயலனி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.அதன் மூலமாக இங்கிருக்கின்ற அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடி முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களை செய்வதற்கு அவர் எதிர்பார்க்கின்றார்.
எனவே அந்த அணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டால் இங்கிருக்கின்ற மக்களுக்கான அபிவிருத்தியை பெற்றுக் கொடுக்க முடியும்.
அந்த அபிவிருத்தியை பெற்றுக் கொள்வதற்கு வட மாகாண மக்களும் உரித்துடையவர்களே.ஏனென்றால் இங்கிருக்கின்றவர்களும் அரசாங்கத்திற்கு எல்லாவிதமான வரிகளையும் செலுத்துகின்றார்கள்.அப்படியானால் அந்த அபிவிருத்தியின் பங்கு இவர்களுக்கும் வந்து சேர வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.அதாவது வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருமான்மையை பெற்றுக் கொடுப்பதற்கு அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற நல்ல சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கும் தனது பங்களிப்பை செய்து வருகின்றது.
இப்படி எல்லா விடயங்களிலும் உதவி செய்கின்ற நாம் ஏன் அபிவிருத்தியை பெற்றுக் கொள்வதில் பின் நிற்கின்றோம்.
அபிவிருத்தியுடன் கூடிய உரிமையை பெற்றுக் கொண்டால் மாத்திரமே இந்த மக்கள் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாகவும் கலை கலாச்சார ரீதியாகவும் முன்நிற்க முடியும்.
எனவே அபிவிருத்தியிலும் உங்களுடைய பங்கை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் முன்வர வேண்டும். இன்று கல்வி தொடர்பான அபிவிருத்தியில் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், ஏனைய அபிவிருத்தியையும் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், வட மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.