அரசியல்செய்திகள்

தமிழ் கைதிகள் விடுதலை : ராஜபக்ஷ அரசின் திடீர் நடவடிக்கைக்கு காரணம் இதுதான்.!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு முழுமையாக இதோ:

“நீண்டகாலம்” சிறையில் இருக்கும், தமிழ் கைதிகள் விடுதலை பற்றி நேற்று முதல் நாள் அமைச்சர் நாமல் சபையில் விசேட அறிவிப்பு செய்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன், எம்பீக்கள் சார்ள்ஸ், ஸ்ரீதரன் ஆகியோர் முன்னெடுப்பில், தமிழ் எம்பீக்கள் கட்சி பேதமின்றி, வெளி விவகார அமைச்சர் தினேஷை சந்தித்தோம். அதன் தொடர்ச்சியே இது என நேற்று அமைச்சர் தினேஷ் என்னிடம் கூறினார்.

இவை நல்ல நிகழ்வுகளே..!

சில தினங்களுக்கு முன் வந்த ஐரோப்பிய ஒன்றிய GSP+ தொடர்பான தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையர் கூறிய கருத்து மற்றும் செப்டம்பரில் ஆணையர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய “வாய்மொழி அறிக்கை” ஆகியவைதான், ராஜபக்ச அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம்.

ஆனால் இவற்றை சொல்லி நாம் இன்று “காரசாரமான அரசியல்” செய்ய தேவையில்லை.

அதேபோல், சமூக ஊடகங்களில் “அரசுக்கு எதிராக எழுதினார்கள்” என சமீப சில மாதங்களாக பயங்கரவாத தடை சட்டம் மூலம், கைதாகும் நபர்கள் பற்றியும் பேச வேண்டும்.

நீதி அமைச்சர் பக்கத்தில் இருக்கும்போது, அமைச்சர் நாமல் எதற்கு இதைப்பற்றி பேச வேண்டும் என்பதும் ஒரு கேள்வி.

ஆனால் இவற்றை எல்லாம் காரணங்களாக கூறி, பல்லாண்டுகளாக சிறையில் வாடும் “நீண்டகால” கைதிகளின் விடுதலையை குழப்பி விடக்கூடாது.

எமது நல்லாட்சியின் போது, 2015க்கும், 2019க்கும் இடையில் சுமார் 100 தமிழ் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டார்கள்.

இதை நமது அரசு சத்தமில்லாமல் செய்தது. அதேபோல் இதையும் சத்தமில்லாமல் செய்ய வேண்டும்.

ஏறக்குறைய தமது இளமைக்காலம் முழுவதையும் சிறைகளில் கழித்து விட்ட இந்த “மனிதர்கள்” படிப்படியாக விடுவிக்கப்பட கூடிய சூழலை பொறுப்புடன். பொறுமையாக ஏற்படுத்துவோம்.

அதேபோல் தொடர்ந்தும் எமது அழுத்தங்களை கவனமாக முன்னெடுப்போம்.

Related Articles

Back to top button