செய்திகள்மலையகம்

தலவாக்கலை நகரில் அதிக விலைக்கு பால்மா விற்பனை; மக்கள் அசௌகரியத்தில்.!

தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தகர்கள், 400 கிராம் நிறையுடைய பால்மா பக்கட்டுகளை 700 முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்துவருகின்றனர்.

அத்துடன், பால்மா வாங்கவேண்டுமானால் அதனுடன் இதர சில பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது 400 கிராம் பால் மாவினை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு நுகர்வோரும் மேலதிகமாக பின்வரும் பொருட்கள் ஒன்றினை கட்டாயம் விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதே வியாபாரிகளின் கட்டளை.
3 பக்கட் சமபோஷ, 6 யோகட், எங்கர் பால், 400 கிராம் என்லின்.

இதன்படி இவற்றுள் ஏதாவது ஒரு தொகுதியை விலைக்கு வாங்கும் பட்சத்தில் மாத்திரமே 400 கிராம் பால் மா வழங்கப்படும் என்ற கட்டாய அறிவித்தலை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நமக்கு தேவையான பால் மாவினை விலைகொடுத்து வாங்கும் அவல நிலை தலவாக்கலை நகரத்தில் காணக்கூடியதாக உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வியாபாரிகளிடம் வினவும் போது அவர்கள் தெரிவிக்கும் கருத்தானது யாதெனில்,

குறித்த பால்மா விநியோகஸ்தர்கள் முகவர்கள் மொத்த வியாபாரிகள் என பலரும் தமக்கு இவ்வாறான ஒரு உடன்பாட்டிற்கு அமைய வே பால் மாவினை தமக்கு வழங்கி வருவதாகவும் அதன் அடிப்படையிலேயே நுகர்வோருக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாடு முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பலரும் தமக்கு தேவையான பால் மாவினை பெற்றுக் கொள்ள முடியாத அவலநிலை தோன்றியுள்ள அதே நேரத்தில் சிறு தொகை பணத்தை மாத்திரம் வைத்திருக்கும் மக்களுக்கு கூட பால் மாவினை கொள்வனவு செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பால்மா விநியோகஸ்தர்கள் முகவர்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் ஏனையோர் தமக்கு தேவையான வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக நுகர்வோரின் வயிற்றில் அடிக்கும் வேலைகளை செய்து வருகின்றமை குறித்து பலரும் விமர்சனம் முன்வைக்கின்றனர்.

வர்த்தகர்கள் கூட தமது வழமையான வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறான நிபந்தனைக்கு அமையவே பால் மாவினை விற்பனை செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.

இக்கட்டான சூழ்நிலையில் வாழும் மக்களின் தேவை அறிந்து செயற்படாத அனைத்து தரப்பினருக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொருளாதார அமைச்சு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கெளசல்யா

Related Articles

Back to top button


Thubinail image
Screen